அமெரிக்க அரசியல் 2012
அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது.
கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!
”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செலவுக் கணக்கும் உயிர்ச்சேதமும் கணக்கு வழக்கே இல்லாமல் உயர்ந்துகொண்டே போனது. தற்போதைய (செப். ’12) கணக்குகளின்படி இன்னமும் 70,000 அமெரிக்க வீரர்கள், எண்ணற்ற தளவாடங்கள் போர்முனைகளில் இருக்கிறார்கள். சற்றேறக்குறைய 6500 அமெரிக்கப் படைவீரர்கள் உயிர் பலியாகி இருக்கிறார்கள்.

எப்பாடுபட்டாவது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேல் மட்ட 1% ல் இருக்கும் மகா பில்லியனர்களுக்கு மட்டும் அதீத வரிச்சலுகைகள் தொடரவேண்டும், நாட்டின் அடிப்படைக் கட்டுமான ஊழியர்களும், நடுத்தர மக்களும், ஏழை எளியவர்கள், வறியவர்கள், மாணவர்கள், முதியவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும், நாடுதழுவிய அடிப்படை வசதிகள் எப்படிப் போனாலென்ன என்று சதா சர்வகாலமும் அதிரடி ஜனசேவை புரிந்தவர்கள் அல்லவா ரிபப்ளிகன்ஸ் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய அமைச்சர் குழாமும்?!
அமெரிக்கப் பொருளாதாரத்தை, ஏன் உலகம் தழுவிய வணிக பொருளாதாரத்தையே அதிபர் புஷ்ஷின் அழிச்சாட்டிய கோஷ்டி நாஸ்தி பண்ணிவிட்டு ஓடிப்போன சமயம் கருப்பு ஒபாமாதான் கிருஷ்ணாவதாரமாக ஓடிவந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவார் என்று பரவலாக நம்பப்பட்டது.
ஒபாமாவும், உதவி ஜனாதிபதி ஜிம் பைடனும் பிரமாதமான முறையில் வெற்றிவாகை சூடினர்..
ஆனால் ஒபாமா எங்கேயாவது நல்லபடியாக ஆட்சி செய்துவிடுவாரோ, நல்ல பெயரை வாங்கிவிடுவாரோ என்று பயந்து நடுங்கி, திரை மறைவிலும், ஏன் வெளிப்படையாகவுமே குடியரசுக் கட்சியினர் கடந்த 4 வருடங்களில் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
“பொருளாதாரம் பற்றிய அடிப்படை விவகாரங்களே புரியாமல் சகட்டுமேனிக்கு அரசுப் பணத்தை வாரி இறைக்கிறார்”, “இனிமேல் நாடே அம்போதான். நாடுதழுவிய ஒபாமா ஹெல்த்கேர் கொள்கைகளால் மருத்துவத் துறை / புது மருந்துகள் கண்டுபிடிப்பு சரிந்துவிடும், ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுவிடும்”, “சிலிகான் வேலியே இனிமேல் காணாமல் போய்விடும்” – என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி ஒபாமாவுக்கு அமெரிக்க காங்கிரசில் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் எத்தனை எத்தனையோ!
”இந்த ஆளே ஒரு வேஸ்ட், ஒண்ணுக்குமே லாயக்கில்லை” என்றெல்லாம் ரிபப்ளிகன் மீடியாவால் எல்லா இடங்களிலும் செய்யப்பட்ட, இன்றும் செய்யப்பட்டுவரும் பொய் பிரசாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
எல்லா எதிர்ப்பையும் மிகுந்த பொறுமையுடனும், நிர்வாகத் திறமையுடனும் சமாளித்து, தட்டுக்கெட்டு நாசப் பாதையில் ஓடிக்கொண்டிருந்த ராட்சஸ அமெரிக்க எஞ்சினை ஓரளவு கட்டுப்படுத்தி நேர்வழியில் சரிசெய்திருக்கிறார் ஒபாமா என்பதே உண்மை.
“பேஷண்டுக்கு ஏற்பட்டிருந்த பயங்கரமான விஷஜுரம் குணமாக்கப்பட்டு விட்டது, மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. அவர் உடல்நிலை தேறி வருகிறார், எழுந்து நடமாடவும் ஆரம்பித்து விட்டார், இனிவரும் நாட்களில் எல்லாமே சரியாகி பழைய பொலிவுடன் அவர் வலம் வருவார்” என்பதே சரி.
அமெரிக்காவில் இப்போது எல்லாம் சரியாகி விட்டதா, நாட்டில் பாலும் தேனும் நடு ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறதா என்றால் இல்லவே இல்லை.
மிகுந்த எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் இடையில் நாலே வருடங்களில் இவ்வளவு தூரம் அமெரிக்க பொருளாதாரம் சீர் செய்யப்பட்டிருப்பதே பெரிய சாதனை.
ஒபாமாவுக்கு எதிராக யாரையாவது அடுத்த எலெக்ஷனில் நிறுத்தவேண்டுமே என்று இரண்டு வருஷங்களாக ரிபப்ளிகன்ஸ் தவித்தே போய்விட்டார்கள். ஒரு உருப்படியுமே தேறவில்லை. கடைசியில் தேடிப்பிடித்து இழுத்து வரப்பட்டவர்தான் இந்த மிட் ராம்னி.
யார் இந்த மிட் ராம்னி?

முதலில் ராம்னியும் டெமாக்ரடிக் கட்சியில் இருந்தவர். ஜான் கென்னடியின் கடைக்குட்டித் தம்பியைத் தோற்கடிக்க முயன்று மண்ணைக் கவ்வியவர். தோற்ற மறுநாளே “இனிமேல் அரசியல் பக்கமே தலைகாட்டமாட்டேன்” என்று சூளுரைத்துவிட்டுப் பிறகு 1993 வாக்கில் ரிபப்ளிகன் கட்சிக்குத் தாவினார்.
மாஸசூஸெட்ஸ் கவர்னராக 2002ல் பொறுப்பேற்ற ராம்னி பட்ஜெட்டில் துண்டு விழுந்ததைக் குறைக்கிறேன் பேர்வழி என்று கல்வி, அடிப்படை வசதிகள் என்று எல்லாவற்றிலும் கைவைத்த புண்ணியவான். இப்போது வரிச்சுமையை ஏற்றக்கூடாதென்று வாதிடும் இதே ராம்னி அப்போது அங்கே வரிச்சுமையை ஏற்றி திருவாளர் பொதுஜனத்தைத் திக்குமுக்காட வைத்த பிரபலம்.
அரசியல் பிரஷர், நெருக்கடிகள் தாங்காமல் அடுத்த எலெக்ஷனில்கூட நிற்காமல் வனவாசம் போயிருந்தவரை இந்த வருஷம் ரிபப்ளிகன் கட்சி, ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரையாக இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறது. சென்ற வார Tampa, Florida கட்சித் தலைமை மீட்டிங்கில் தன் கட்சியின் அபேட்சகராகவும் அதிகாரபூர்வமக அறிவித்துவிட்டது!
நேற்றைய தினம் ஒபாமாவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டார். Charlotte, North Carolina மீட்டிங்கில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் உரை குறிப்பிடத்தக்கது. ’கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒபாமா எதிர்க்கட்சிக்காரர்களுடன் பாராட்டும் நல்லுறவு, நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்துவரும் பெரு முயற்சிகள், தக்க சமயத்தில் அமெரிக்க கார் தொழிலுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்ட புத்திசாலித்தனம்’ எல்லாவற்றையும் புகழ்ந்த கிளிண்டன் “மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ஒபாமை விட்டால் இந்த நாட்டுக்கு வேறு கதி இல்லை, ரிபப்ளிகன்கள் மீண்டும் தலை தூக்கினால் உலகப் பொருளாதாரமே மீண்டும் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விடும்” என்பதை மிக உறுதியாக எடுத்துச் சொன்னார்.
மிட் ராம்னியின் ஸைட்கிக் ரையன் பற்றி அடுத்த போஸ்டிங்கில் பார்ப்போம்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்!” அமெரிக்க பொருளாதாரம்தான் நிலைகுலைந்து போனதே தவிர, அதனால் நாடெங்கும் புரட்சி வெடித்து விடவில்லை, மாநிலத்துக்கு மாநிலம் அடக்க முடியாத ஊழல்கள் ஏற்பட்டு விடவில்லை, அமெரிக்கக் கட்டுமானங்களும், தொலைதூர தொடர் சாதன அமைப்புகளும், எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை.
தமிழ் சினிமா பாணியில் சொல்வதென்றால் “அமெரிக்கா தப்பு பண்ணாது, மீண்டும் ஒரு ரவுண்டு வரும்!”
அடுத்து வரும் வாரங்கள் மிக சுவாரசியமானவை!
(அரசியல் செய்வோம்)
4 comments:
Why dont you first disclose that you are a hardcore democrat before writing this piece.
This post is more partisan than msnbc or fox news :)
Sorry அநாநீஸ்!
கூகுள் ஸ்பாமில் சிக்கிக்கொண்ட உங்கள் கடிதங்களை இப்போதுதான் கண்டுபிடித்து ரீலீஸ் செய்தேன்!
முதல் அநாநிக்கு,
Why don't you first disclose who you are!
இரண்டாவது அநாநிக்கு,
;-))
Am I reading Paul Krugman New York Times articles in Tamil? You have nicely summarized all his writings over these four years.
Post a Comment