என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, February 16, 2011

சர்க்கரையால் ஆன பயன்!

சென்ற வருட ஏப்ரல் வெயிலில் சுருண்டு பின்னங்கால் பிடறியில் பட அலறி ஓடியவன், இந்தத் தடவை வெயிலைக் கண்டு ஒரு பயத்துடன்தான் ஃபிப்ரவரியிலேயே சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன்.

கும்மிருட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியபோது மீனம்பாக்கம் வழக்கம்போல் அணையப்போகும் சிம்மிணி விளக்கு மாதிரி கண் சிமிட்டியது.

வெளியே வந்தால், சிவப்பு விளக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சீறும் வாகனங்களைக் கண்டு ஒருமுறை துணுக்குற்றேன். என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார். ம்ஹூம், பொத்திக்கிறதே பெட்டர்!

நந்தனம் அருகே விளக்கே இல்லாமல் நடுரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சஸ லாரி ஒன்றில் மோதிக் கிடந்த அகாலமரண வண்டிகளின் கண்ணாடிச் சிதறல்கள்மேல் நாங்கள் கொஞ்சமும் கவலையின்றி வேகமாகவே கடந்தோம்.

நான் எதிர்பார்த்தபடியே, பாண்டி பஜாரில் டாக்ஸி பங்க்சராகி, (“தோ ஆய்டும் சார்! ஏளு மாசத்துக்குப் பொறவு இப்பத்தான் பங்க்சரு!”) சும்மா ஒரு மோனத்தவத்தில் தெருவோரம் நின்று கொண்டிருந்தவனை எத்தனை பேர் பார்த்தார்கள், தெரியவில்லை. கொசுக்கள் மட்டும் ொய்க்க ஆரம்பித்து மீள் சுய அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தன. போலீஸ் வேன், போலீஸ் கார், போலீஸ்காரர்கள் மட்டும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார்கள் (”என்னய்யா, ஜாக்கியெல்லாம் இருக்குல்ல?!)

“அடடா, இங்கே ஒரு பிள்ளையார் கோவில் உண்டே” என்று இருட்டில் துழாவி, கோவிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த யானைமுகனை ’மற்றவன் தாள் நண்ணுவதும் நல்லார் கடன்’, நமக்கெதுக்கு வம்பு என்று எழுப்பாமல் விட்டேன்.

வழக்கம்போல் சிங்காரச் சென்னை வயதான ஒரு சீக்காளியின் அழுக்குடனும், துர்நாற்றத்துடனும் முக்கல் முனகல்களுடனும் தூங்கவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஏதேதோ பெனாத்திக் கொண்டிருந்தது.

“இந்த தபா அம்மா வந்திருவாங்க சார்” என்று வண்டியோட்டி டயர் மாற்றியவாறே அபிப்பிராயப்பட்டார்.

ம்ம்ம், அப்படியா?! இனிமேல் பாண்டி பஜாரில் தேன் ஓடுமோ என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.

மீண்டும் சென்னை!

ஜெட்லாக் அவஸ்தையில் அதிகாலை நாலு மணிக்கு டீக்கடை ஒன்றில் ஸ்பெஷல் டீ! ஸ்ஸப்பா எவ்வளவு சர்க்கரை! இதுவும் இங்கே இலவசமோ?

“நாயர், இதே மாதிரி இன்னொரு டீ, ஆனா சர்க்கரையே போடாதீங்க”

“சரி சார்” என்றபடி இரண்டாவது டோஸ் சூடான டீயில் இரண்டு மடங்கு சர்க்கரை தந்தார் மகானுபாவர்.

“அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் சென்று பூட்டு மாட்டியிருப்பதைப் பார்த்துத் திரும்புகிறேன்” என்று வருத்தப்பட்டு பாரதி மணி எழுதி இருந்தாரே என்பது நினைவு வந்தது.

இதோ, சர்க்கரையால் ஆன சுறுசுறுப்புப் பயன், பூட்டு திறக்கப்பட்டு விட்டது!

வாங்க, பேசலாம்!

10 comments:

பாரதி மணி said...

வருக....வருக...எல்லே ராம்!

நீங்கள் செட்டிலானபிறகு, சாவகாசமாக சந்திப்போம். எனது கமெண்டுக்கும் மதிப்பிருக்கிறது!

அன்புடன்,
பாரதி மணி

Simulation said...

டிபிகல் என்.ஆர்.ஐ மாதிரி வழக்கம் போலவே, சென்னையின் கொசுக்கடி, சாக்கடை நாற்றம், ஒழுங்கற்ற வரிசைகள், ரோட்டில் எச்சில் துப்புவர்கள் என்றெல்லாம் புலம்பாமல், உருப்படியாகப் பதிவிட்டால் ரசிப்போம்.

- சிமுலேஷன்

அபுல் கலாம் ஆசாத் said...

நண்பர் மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம் வைக்கச் சொன்னதாகச் சொல்லுங்கள்ஜி :-)

ஆசாத்

அபுல் கலாம் ஆசாத் said...

மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம் வைக்கச் சொன்னதாக்ச் சொல்லுங்கள்ஜி :-)

ஆசாத்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் மணிஜி?! உங்களிடம் நான் வைத்திருக்கும் நல்லபிப்ராயத்தை ‘அபிவாதயே’வுடன் சொன்னாலாவது நம்புவீர்களா?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

யோவ் சிமுலேஷ சில்மிஷம்!

என்னதான் முகமூடி போட்டுக்கொண்டு நீர் மனிஷா கொய்ராலா துரும்பு போஸ் கொடுத்தாலும் அந்த RTP தூண் பல்லிளித்துக் காட்டிக் கொடுத்து விட்டது ஓய்!

நீர் மட்டும் ‘மைலாப்பூரின் அவலங்கள்’ என்று போட்டோ ப்ளாக் போடலாம்.( http://mylapore-civic-issues.blogspot.com/ ) அசமஞ்ச என்ஆர்ஐ மாதிரி நான் பொத்திக் கொண்டு சென்னைவனநாத தலபுராணம் பாடிக் கொண்டிருக்கவேண்டுமா? நல்ல கதையா இருக்கே!

கூப்பிடறேன் மெய்லாபுர் கபாலிய!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க அபுல் பாயி, நெம்ப நாளிக்கி நெம்ப நாளு!

நாமலாம் ஆரு, இன்னா குருப்பு, இன்னா அக்குரும்பு கெர்கம்னு புர்யாம ஆட்றாங்கோ பிசுகோத்துப் புள்ளிங்கோ!

மெய்லாபுர் கபாலி தலிவரு சொன்னமேறிக்கி வூடு கட்டி, பாவு போட்டு, ஸலாம் வெக்கிறான் பாயி இந்த எட்டாம் நம்பர் மண்ணு மோட்டு கபாலி!

வர்ர்ர்ட்ட்ட்ட்டா?!

Travis Bickle said...

என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார்.

ROTFL

It will be nice if you can post more.

BalHanuman said...

ராம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலக்கி விட்டீர்கள். உங்களை மீண்டும் வரவழைப்பதில் புண்ணியம் கட்டிக் கொண்ட திரு. பாரதி மணி அவர்களுக்கு நன்றி.

உங்களை நேரில் சந்திக்க ஆவல். சான் ஃப்ரான்சிஸ்கோ பக்கம் வந்தால் அவசியம் சந்திக்கலாம்.

Anonymous said...

THANKS TO BARATHI MANI SIR, FOR MAKING YOU WRITE. FREQUENTLY I USED TO VISIT UR BLOG AND GET DISAPPOINTED. WELCOME SIR. YOUR HUMOROUS POSTS ARE VERY NICE TO READ. ITS ONLY IRONICAL YOU HAVE GIVEN A CAPTION LIKE WELCOME ROMBA NAALACHU PAATHU! ADHU NAANGA SOLLA VENDIYATHU! URIMAIYUDAN, SASISUGA.