என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, September 07, 2004

திருஷ்டிப் பூசணிக்காய்

"வீடு பிரமாதமாக இருக்கிறதே, அடாடா! 'ப்ளாக்' சூப்பர்யா"

"உங்களுக்கு என்னண்ணா, கொடுத்து வெச்சவர். எல்லா நண்பர்களும் போட்டி போட்டுண்டு உதவி பண்றா"

"கன்கிராஜுலேஷன்ஸ், குட் லக், ஆஹா ஓஹோ, பேஷ் பேஷ், பலே பலே"

"அசத்துங்கயா, ஆனாக்க ஆரயும் திட்டவேணாம்"

"ஏண்டா டேய், என் பூனைய நான் புகழ்ந்தா உனுக்கென்னடா, பேமானி"

என்றெல்லாம் நண்பர்கள் என் ப்ளாக் அரங்கேற்றத்தைப் புகழ்ந்து தள்ளி நான் மனமகிழ்ந்திருக்கும்போது தான் அது நடந்தது.

*************** ************* *************

அதாவது, என் புது VoIP போன் முதன் முறையாக மணி அடித்தது. பாய்ந்து எடுத்தேன்.

VoIP தொலைபேசி தெரியும் இல்லையா? '

கால்' இலவசம். கட்டணம் கிடையாது. கட்டாயம் ஏதும் இல்லை. கண்ட நேரத்தில் காசு பயமில்லாமல் கண்டவர்களுடன் காணாது கண்ட மாதிரிக் கண்டபடி கலாய்த்திருக்கலாம்.

அதுவும் 'கால் குவாலிடி' சரியில்லையென்றால் முப்பது நாளில் எல்லாவற்றையும் திருப்பிக்கூடக் கொடுத்து விடலாம். முழு முன் பணத்தையும் உடனேயே திருப்பி விடுவார்களாம். வீட்டுச் செல்வைக் குறைப்பதற்காக நான் இதை மிக முனைந்து செய்திருப்பதில் என் மனைவிக்கு ஏகப் பெருமை.

என் அருமை நண்பர் போனில் தொடர்ந்தார்:

"உங்க ப்ளாக் வீட்டுக்கு வெறுமனே சூப்பர்செம் அடிச்சா மட்டும் போதாது ராம். இங்க வால் பேப்பர் ஒட்டி, அங்க கார்பெட் போட்டு, அப்படியே ரெண்டு ஸ்ப்ளிட் லெவல் ஏசிய மாட்டி ..." என்று நண்பர் சொல்லச் சொல்ல நான் சொக்கிப் போனேன்.

நண்பர் மிக நல்லவர். என்பால் அன்பும் ஆதுரமும் கொண்டவர். நான் அடிக்கடி ஏதாவது எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுச் சொல்வதில் தவறே இல்லை. அவர் முகவரியைச் சொல்லலாம். ஆனால் அவர் கல்லடி படுவதில் எனக்கு இஷ்டம் இல்லை.

"நீங்கள்லாம் எதுக்குக் கஷ்டப்படறீங்க, நானே இத அப்டியே ஊதிடறேன் பாருங்க"

"இல்ல ராம். அதுல ..."

புதுப் போன் அல்லவா? கொஞ்சம் கமறிச் செருமியது. அதனால் பரவாயில்லை என்று கனெக்ஷனைத் துண்டித்தவன் நான் தான். இல்லாவிட்டால் 'நானே இதையும் செய்து தருகிறேன்' என்று நண்பர் அன்புத் தொல்லையை ஆரம்பிப்பார். எதற்கு அவருக்கு சிரமம்? எத்தனை நாள் தான் அப்பா செல்வாக்கு, அண்ணன் செல்வ வாக்கு என்று நான் பிறரைச் சார்ந்தே புகழ் பெறுவது? என் பெயர் அன்புமணியோ, தயாநிதியோ அல்லவே!

நண்பர் கொடுத்திருந்த ஒரு ஹோல்சேல் உரலைச் சுட்டினேன்.

'புச்சா பிளாக்கு கட்டிக்குறியா மச்சி? இங்ஞன வா, அல்லாத்தயும் ஈஜியா பண்ணுறதுக்கு, சும்மா ஸல்லுனு வெச்சிகிறம் பாரு ப்ரொக்ராம்சு' என்று கொஞ்சம் ஜல்லி கலந்து அங்கே எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி இருந்தார்கள். அதையெல்லாம் படிக்க எனக்கு அவகாசம் இல்லை. மேனேஜ்மெண்டில் இருந்து கொண்டு யாராவது மேனுவல் படிப்பார்களா?

'டவுன்லோட்' எங்கே என்று மட்டும் தேடினேன். எலியைச் சொடுக்கி எல்லாவற்றையும் செய்து முடிக்க முடுக்கி விட்டேன். கணினி கருமமே கண்ணாகத் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது.

'ப்பூ, ஈதென்ன பிரமாதம். சொதியோடு ஆப்பம் கலந்து பலகாரம் பண்ணி,
ஒரு கோப்பி குடித்துண்டு ஈண்டு வந்தால் எல்லாம் சரியே ஓடும்' என்று மாடியிலிருந்து கீழே இறங்கிப் போனவன், 'சன் டீவி'யில் இப்பொழுது ஆடுவது ரக்ஷிதாவா, ரகசியாவா? சீனா தானா, பூனா தானா என்கிற அரும்பதங்களின் உள்ளார்ந்த பொருள் என்ன?' என்பது போன்ற லோகாயதக் கவலைகளில் மூழ்கி விட்டேன்.

********** *********** ************

சில மணி நேரங்கள் சென்றபின், அயர்ந்து ஹைபர்னேஷனில் தூங்கிக்கொண்டிருந்த கணினியை நான் தட்டி எழுப்பினேன். சோம்பல் முறித்தவாறே என் ஹார்டு டிஸ்க் உயிர் பெற்றது.

'அட, இவ்வளவு சீக்கிரமே எல்லா வேலைகளும் முடிந்து விட்டன் போலும். நல்லவேளையாக நண்ப்ரைத் தொந்தரவு செய்யாமல் நாமே எல்லாவற்றையும் அட்டகாசமாகச் செய்து முடித்து விட்டோமே. இந்தப் பெருமையையும் மனையாளிடம் சொல்லி வைத்தால் அவள் அகமகிழ்வாள். அப்படியே அந்தக் குதூகல நேரத்தில், நேற்றைய ஷாப்பிங்கில் நாம் வாங்கிக் கேரேஜில் ஒளித்து வைத்திருக்கும் ஒரு சில திரவ பதார்த்தங்களையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஒழுங்கு பண்ணி விடலாம்' என்றெல்லாம் என் மனக் குதிரை இறக்கை கட்டிப் பறந்தது.

அப்போது தான் என் புது 'ப்ளாக்'கின் அலங்கோல நிலையைக் கவனித்தேன். 'இது தேவயானியா, சுவலட்சுமியா?' என்று நாம் சில சமயம் குழம்புவோமே அதே போன்ற ஒரு குழப்பம்.

ப்ளாக் என்னுடையது தான். சந்தேகமே இல்லை. ஆனால் 'லிங்கு'கள், பா.ம.க வினர் சிதைத்த 'பாபா' படச் சுருட்கள் போல் கலைந்திருந்தன. படிக்கவோ, பார்க்கவோ முடியவில்லை. த்ரிஷா மாதிரிச் 'சிக்'கென்றிருந்த என் ப்ளாக்கின் அகல, நீள, கன பரிமாண அழகுகள், கரெண்டு கம்பத்தில் அடிபட்ட காக்காய் வடிவேலுவாய்க் கலர் மாறிக் கருத்திருந்தன.

அதையெல்லாம் விட மிக முக்கியமாக- நான் என்றும் போற்றும் ஆயிரக்கணக்கான என் கண்மணி வாசகர்கள் (சரி, சரி. பத்துக்கணக்கான என்று திருத்திப் படிக்கவும்) எனக்காகவே பாசத்துடனும், பரிவுடனும், ஆசையாகவும், ஆசி வழங்கியும், அட்வைஸ் பண்ணியும், ஒரு சிலர் எச்சில் கலந்த ஈரத்துடனும், எனக்காகவே எழுதியிருந்த- 'கமெண்ட்ஸ்' செக்ஷன் கபோதியாகி விட்டிருந்தது.

'கமெண்ட்ஸ் -0' என்று கணினி காட்டியதில் நான், 'துடித்தேன், தொழுதேன், பல முறை நினைத்தேன் அழுதேன், கலைவாணியே உனைத்தானே" என்று கல்யாணியில் கதறினேன்.

'எனக்கு நானே இழைத்துக்கொண்ட மாபெரும் துரோகத்துக்கு யான் என்ன செய்வேன்? தவறைத் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வர யாது செய்ய வேண்டும்?' என்றறிய ஓடினேன் அதே பழைய உரலைத் தேடி. அந்த அம்மித் தலையர்கள் தலையில் உலக்கையைத் தூக்கிப் போட வேண்டும்.

அங்கே அவர்கள் எழுதி இருந்த 'கஷ்டம்ர சால்ஜாப்பி'ன் சாராம்சம்:

'யோவ், ஃப்ரீன்னா பினாயிலயே குடிப்பியே நீயு இப்ப இன்னா துட்டா குடுத்துட்டே எனுக்கு? இன்னாவோ கூவிக்கிட்டு ஓடியாரியே. மவனே, எதுனா வோணும்னா, காசு போட்டு ஒரு 'ப்ரிமியம் மெம்பருஷிப்' வாங்கு. அப்பால பாத்துக்குவம். வந்துட்டான்யா சப்போர்ட்டு கேட்டுக்குனு, சாவுகிராக்கிங்க'

என் புது 'ப்ளாக்'கின் புத்தம்புது அவலட்சணத்தை என்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாரிடம் சொல்லி அழ?

அவளிடமே சொல்லலாமா? 'வருவாளா, அவள் வருவாளா? உதவி செய்ய அவள் வருவாளா? இல்லை, உதை கொடுத்துக் கொஞ்சம் மகிழ்வாளா?'

பல வருடங்களுக்கு முன் நான் சென்னையில் ஒரு புது ஸ்கூட்டர் வாங்கினேன். அதற்குத் திருஷ்டி கழிக்கு முகமாகச் சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு, ரியர்வியூ மிர்ரர் காதில் மஞ்சள் கனகாம்பரம் எல்லாம வைத்து முடித்த பிறகு, என் மனைவி ஒரு பெரிய பூசணிக்காயைக் கொண்டு வந்து கொடுத்தாள். துவிச் சக்கர வண்டியைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, அய்யனாரையோ பிடாரியையோ அவள் அம்மாவையோ மனத்தில் வேண்டியபடி அந்தப் பூசணிக்காயை வாசலில் உடைக்குமாறு பணித்திருந்தாள். நானும் அதையெல்லாம் சரியாகச் செய்து முடித்தேன்.

ஸ்கூட்டரில் மனைவியுடன் ஒரு புது ரவுண்டு முடித்து, வீடு வந்து சேரும் காலையில் நானே உடைத்த நன்றி கெட்ட பூசணிக்காய் மீது வழுக்கிக் கீழே விழுந்ததில், புது ஸ்கூட்டர், என் முழங்கை, மனைவியின் முழங்கால், எதிர் வீட்டு நாய் ஜிம்மியின் வால் என்று எல்லாமே ஒரே நேரத்தில் நசுங்கி இன்புற்றிருந்த ஞாபகங்கள் என்னுள் 'ஆட்டோகிராஃபாய்'க் கிளர்த்தெழுந்தன.

ஆக, இது பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சு விட முடியாது. அவள் வர மாட்டாள். வந்தாலும் திட்டுவாள்.

வீட்டில் மூச்சு முட்டுபவர்கள் வெளியில் எங்காவது தான் சொல்லி அழ வேண்டும். நானும் அழுதேன்.

நல்லவேளையாக, என் கணிசமான நண்பர் குழாத்தின் இன்னொரு புத்திசாலிப் புலி, என் உதவிக்கு வந்து என்னைக் கரை சேர்த்து விட்டது.

************* ************* ***********

மறுபடியும் அதே VoIP என்னைத் தொணப்பியது.

"ராம், நேத்து கொஞ்சம் லைன் சரியில்ல போல. நீங்க அந்தப் ப்ரொக்ராம் யூஸ் பண்றத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒரு 'பேக் அப்' எடுத்துக்கிட்டீங்கல்ல?"

யார் சொன்னது, 'ப்ளாக்' எல்லாம் 'சுய புலம்பல்' என்று?

-என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்






No comments: