நான் மட்டும் இங்கே இத்தனை காலமாக எழுதி உங்களை வாட்டி வதைப்பது போதாதென்று இனிமேல் நான் ரசிக்கும் சிலருடைய கட்டுரைகளையும் தந்து உங்களை இம்சிக்க முடிவெடுத்து விட்டேன்!
இந்த ‘படித்ததில் அடித்தது’ கட்டுரைகளின் கருத்துகள் கட்டுரையாளருடையவையே! அதாவது, ’திட்டுபவர்கள் கட்டுரை எழுதியவரையும், பாராட்டுபவர்கள் என்னையும் பாரட்டலாம்’ என்பது சிறு குறிப்பு.
முதல் கட்டுரை இதோ:
கூடங்குளம் - ஒரு அறிவார்ந்த பார்வை (ச. திருமலைராஜன்)
அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகள் மேடை போட்டுக் கூட்டம் நடத்தினால் ’ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார்’ என்பார்கள். இப்பொழுது அணு உலை எதிர்ப்பாளர்கள் எல்லாம் ஜப்பானைப் பார், ஜெர்மனியைப் பார் என்கிறார்கள்.
இரண்டுமே தவறான பார்வை. அவர்கள் அடிக்கடிச் சொல்வதினால் நானும் சரிதான் பார்த்துத்தான் வைப்போமே என்று பார்த்ததில் சில உண்மைகள் தெளிவாயின.
இத்தனை நாட்களும் மக்களை இந்த கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் முட்டாள்களாக்கி வந்திருக்கும் விஷயம் தெரிந்தது. முதலில் ஜப்பான். ஜப்பான் தனது அணு உலைகளையெல்லாம் மூட முடிவு செய்து விட்டதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து வருகிறது. உண்மையில் ஜப்பான் அணு உலைகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். எந்த அணு உலையையும் அவர்கள் மூடப் போவதில்லை. ஆக இது முதல் பொய்.
அடுத்ததாக இவர்கள் ஜெர்மனியைப் பார் என்றார்கள். நேற்று ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு எரிசக்தித் துறை விஞ்ஞானி ஜெர்மனியின் மின்சாரத் திட்டங்கள் குறித்து நிகழ்த்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெர்மனியையும் பார்த்தேன். ஜெர்மனி தனது அணு உலைகளை 2022ம் ஆண்டு வாக்கில் மூடத் திட்டமிட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதை மட்டும் சொல்லும் நம் அறிவாளிகள் ஜெர்மனி குறித்தான பிற உண்மைகளைச் சொல்லாமல் அவர்களது 17 அணு உலைகளை மூட உத்தேசித்திருப்பதை மட்டுமே பிரசாரம் செய்து ஊரை ஏமாற்றுகிறார்கள்.
முதலில் ஜெர்மனியின் உச்ச கட்ட மின்சாரத் தேவை 80 கிகா வாட்டுகள் தான். ஆனால் அவர்களின் மின்சார உற்பத்தித் திறனோ 180 கிகா வாட்டுக்கள். ஆக அவர்களது அதிக பட்சத் தேவையை விட இரு மடங்கு மேலாக அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். அந்த 180 கிகா வாட் உற்பத்தியில் அணு உலை மூலமான மின்சாரம் 18% மட்டுமே. ஆக இந்த 18% அணு உலைகளை அவர்கள் மூடி விட்டாலும் கூட அவர்களுக்கு அதனால் 1 யூனிட் மின்சாரம் கூட நஷ்டமாகப் போவதில்லை. ஜெர்மனி மக்களுக்கு 1 நொடி கூட மின்சாரம் நின்று விடப் போவதில்லை.
ஏற்கனவே தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி செய்து வரும் ஜெர்மனி தன் அணு உலைகளை மூடுவதினால் அவர்களுக்கு எந்த வித இழப்பும் இல்லை. கூந்தல் உள்ள மகராசி அள்ளியும் முடியலாம் அவிழ்த்தும் போடலாம். ஆனால் இந்தியாவின் கதை என்ன? ஜெர்மனியின் ஜி டி பி என்ன இந்தியாவின் ஜி டி பி என்ன? ஜெர்மனியின் ஏற்றுமதி என்ன இந்தியாவின் ஏற்றுமதி என்ன? ஜெர்மனி எரிசக்தித் துறைசார் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் பணம் என்ன இந்தியா செலவழிக்கும் நிதி எவ்வளவு? இந்தியாவின் பரப்பு என்ன? இந்தியாவின் மக்கள் தொகை என்ன? இந்தியாவின் உச்ச பட்ச மின் தேவை என்ன? இந்தியாவின் தற்பொழுதைய உற்பத்தித் திறன் என்ன? இந்தியாவைச் சுற்றி என்ன விதமான நாடுகள் இருக்கின்றன? அவைகளில் எந்த நாடாவது இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் திறனுடன் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதா? இந்தியாவின் மின்சார வலையின் கட்டுமானம் என்ன? இந்தியாவின் மரபுசாரா மின்சாரத்தின் திட்டம் என்ன?
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சும்மா ஜெர்மனியைப் பார் என்று சொல்வது முட்டாள்கள் செய்யும் மூளையற்ற பிரசாரம் மட்டுமாகவே இருக்கும்.
ஜெர்மனி கடந்த பத்து ஆண்டுகளில் தனது மரபுசாரா மின்சார உற்பத்தியை மொத்த உற்பத்தியில் 25% ஆக அதிகரித்துள்ளது. அதில் பெரும்பாலும் இயற்கை எரிவாயு மூலமாக வருகிறது. சோலார் மற்றும் காற்று மூலமாக ஒரு 5 % மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. இருந்தாலும் தனது மாற்று மின்சார உற்பத்தியினைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ம் ஆண்டுக்குள் பத்து லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சோலார் போன்ற எரிசக்தி ஆராய்ச்சிகளுக்கு 5 பில்லியன் ஈரோக்களைச் செலவழித்துள்ளது.
ஆக எந்த விதத்திலும் இந்தியாவை ஜெர்மனியுடன் ஒப்பிட்டு ’அவன் அணு உலையை மூடி விட்டான் ஆகவே நீயும் மூடு’ என்று சொல்லவே முடியாது. பதிலாக ஜெர்மனியிடம் இருந்து மாற்று எரிசக்தியின் சதவிகிதத்தை எப்படி அதிகரித்துக் கொள்வது என்பதை இந்தியா நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை அந்த விஷயத்துக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். ஜெர்மனியைப் போல மின்சார உற்பத்தியில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்தியாவும் வளர்ந்த பின்னால் தாராளமாக இந்தியாவும் கூடங்குளத்தை மூடிக் கொள்ளலாம்
அது வரை இந்தப் பொய்ப் பிரசாரத்தைச் செய்பவர்கள் எல்லாம் ”ஜெர்மனியைப் பார்” என்று சொல்லி தங்கள் முட்டாள்த்தனத்தை காட்டிக் கொள்ளாமலாவது இருக்கலாம்
(ஆசிரியரிடமிருந்து உரிய முறையில் அனுமதி வாங்கி பிரசுரிக்கப்பட்டது)
5 comments:
இந்தக் கட்டுரைக்கெல்லாம் கமெண்ட் ஒரு கேடா.
Good points
Good sharing...keep it up.
May I sue this article in my Facebook. I am thoroughly confused regarding this issue....
சீதாஜி,
I hope you mean 'use' and not 'sue'!
You may use it!
Post a Comment