என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 27, 2011

கொழிக்கிறது சைனா! 4

மெயின் கைடான ஜார்ஜ் தவிர, ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு ஒரு ‘குட்டி’ கைட் உண்டு. ஒரே ஆள் எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்ளாமல் இருக்கவும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஏற்பாடு எனக்கும் பிடித்திருந்தது. பெய்ஜிங்கில் எங்கள் புது சங்கராச்சாரியாராகக் கொடி பிடித்து வந்தது ஜாக் (Jack) என்கிற ஒரு பெய்ஜிங் யுனிவர்சிடி கிராஜுவேட். சைனாவின் பழம் பாரம்பரியம், மன்னர் ஆட்சி, செம்புரட்சி என்று ஏதாவது ஒரு தலைப்பில் ஜாக் எங்களுக்கு விபரங்கள் சொல்லியபடியே வந்தான்.

கூட்டமான இடங்களில் ஒரு கைட் கொடியுடன் முன்பக்கமும், இன்னொரு கைட் பின்பக்கமாகவும் வந்தது பெரிய சௌகரியம். திருப்பதியில் மொட்டைகளை விடச் சீனாவில் சீனர்கள் மிக அதிகமென்பதால், நாங்கள் கூட்டத்தில் தொலைந்து போவது மிக சுலபம். எங்களை இப்படி அடைகாத்து அவர்கள் அழைத்துச் சென்றபோதும் எங்களில் சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தொலைந்து போன கதைகளை ஆங்காங்கே சொல்கிறேன்.

Forbidden City மொத்தம் 178 ஏக்கர்கள். அத்தனையும் சுற்றிப்பார்க்க ஆயுள் போதாது. எல்லா இடங்களுக்குள்ளும் எல்லோரும் போகமுடியாது. இருந்தாலும் அரண்மனை, அந்தப்புரம், அகழி என்றெல்லாம் வெயிலில் நடந்து டூரிஸ்ட் பணி ஆற்றியதில் எக்கச்சக்க பசி.

ஜாக்கைத் தனியே அழைத்து எங்கள் வெஜிடேரியன் தேவைகளைச் சொன்னேன். மதிய சாப்பாட்டுக்கு ’ஹுடாங்’ (Hutong) என்கிற ஒரு ஏரியா பக்கம் போகப்போவதாகச் சொன்னான்.

பெய்ஜிங் மன்னரின் Forbidden City அரண்மனைக்குப் பக்கத்திலேயே அமைச்சர்கள், பெரிய அரசு அதிகாரிகள் வசித்தார்களாம். அவர்கள் வீடுகளும், தெருக்களும் விசாலமான பெரிய ஏரியாக்களே. அதற்கு அடுத்த அடுக்கில், வணிகர்கள், வியாபாரிகள். அதற்கும் அடுத்த வெளி அடுக்கில் தான் ‘ஹுடாங்’. கிட்டத்தட்ட நம் திருவல்லிக்கேணி சந்து பொந்து ஏரியாக்கள் மாதிரி. கார்களோ, பஸ்களோ போகமுடியாது.

Photobucket

ஹுடாங்களில் இன்னமும் பலர் நூற்றுக்கணக்கான வருஷங்களாக இடம் பெயராமல் தொடர்ந்து வசித்து வருகிறார்களாம். இப்போதைய சைனாவில் பல ஹுடாங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுப் புத்தம்புது அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளெஸ்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும், ஒரு சில ஹுடாங்களை- டூரிஸ்ட்களுக்குக் காட்டவாவது- விட்டு வைத்திருக்கிறார்கள்.

அங்கெல்லாம் டூரிஸ்ட்கள் சுற்றிவர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சை. ரிக்‌ஷாவிலும் இரண்டு பேர் என்று சில பல ரிக்‌ஷாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அதை ஓட்டுபவர்கள் முக்கால்வாசியும் படிப்பறிவில்லாத தெற்கு சீன கிராமவாசிகள், ஏதோ ஒரு பிழைப்பு தேடி பெய்ஜிங் போன்ற பெருநகரங்களுக்கு வந்து சேர்ந்தவர்கள்.

Photobucket

வரிசை வரிசையாக எங்கள் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஒரு ஹுடாங் ஏரியாவுக்குள் படையெடுத்தன.

ஒரு டிபிகல் ஹுடாங் வீட்டில்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநேகமாக எல்லா நாட்களிலுமே எங்கள் காலை உணவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில்தான். வழக்கமான 5 நட்சத்திர ஹோட்டல் ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே, எக்கச்சக்கமான சாய்ஸ்கள். என்னதான் காலையில் ஒரு ஃபுல் கட்டு கட்டியிருந்தாலும் வெயிலிலும் கூட்டத்திலும் அலைந்து திரிந்ததால் எல்லோருக்கும் நல்ல பசி.

அந்த ஹுடாங் வீடு, ஒரு சின்னஞ்சிறு ஒட்டுக்குடித்தனம். ஒரு சின்ன ஹாலில் மூன்று வட்டமேஜைகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வேண்டுமென்பவர்களுக்கு 2 கிளாஸ் ‘ஜில்’லென்ற பியர், கோக் அல்லது தண்ணீர். சீனாவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் என்பதால் கேட்டால்தான் தண்ணீர்!

பிரம்மபுத்ரா நதியின் தண்ணீரை இப்போது இந்தியாவும் சைனாவும் பங்குபோட்டுக் கொண்டிருந்தாலும், அதன் குறுக்கே அணைகள் கட்டி, ஏகப்பட்ட அடாவடிகளில் சைனா ஈடுபட்டு வருவது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். இன்னும் சில வருடங்களில் சீனாவுடன் நமக்கு இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கக்கூடும் என்பதற்கு இப்போதே பல சாட்சியங்கள் தென்படுகின்றன.

சீனாவெங்கும் ’கோக்’கின் ஆதிக்கம், பெப்ஸி எங்கேயாவது மிக அபூர்வமாக. இன்னொரு விஷயம்- சீனர்களுக்கு டயட் கோக் பிடிப்பதில்லை. சீனாவில் அது எங்கேயுமே கிடைக்காத அபூர்வம்.

Photobucket

சீன பியரான Tsingtao, Lager வகையைச்சேர்ந்த ஒரு வீக் பியர், கொடுமையின் உச்சம், பூனை மூத்திரத்தின் மறு பெயர்! கொஞ்சம் டேஸ்ட் பார்த்த உடனேயே கல்யாணி 5000, 10000 கஸ்டமர்கள் இதன்மேல் காறித்துப்பும் அபாயம் மிக அதிகம். அமெரிக்கக் கேவலங்களான Bud Lite, Miller Lite, Michelob போன்ற கொடுமைகளை விட மகாக் கொடுமை சைனீஸ் பியரே. அட, அட்லீஸ்ட் எங்கேயாவது ஒரு Heineken, Corona, Kingfisher, Ale, Stout கிடைக்குமா என்று நாக்கை சப்புக்கொட்டினால் கிடைக்கப்போவது ஏமாற்றமே. சீன ஒயினுக்கு சாக்கடைத் தண்ணீரே பெட்டர் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

பொதுவாகவே சீனர்களுக்கு ஆல்கஹால் உதவாதாம். அவர்களுடைய மரபணுக்களால் ஆல்கஹாலை சமாளிக்க முடிவதில்லையாம். அதனால் சீனாவில் குடிகாரர்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். Johnnie Walker Black Label, Chivas Regal போன்ற இந்திய தேசிய ஸ்காட்ச் வகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே. அதுவும் அநியாய விலையில். சொட்டுச் சொட்டாக அளந்து, தங்கம் போல் தராசில் வைத்து எடை போட்டு, எக்கச்சக்கமான ரேட்டில், சர்சார்ஜ், வரி என்றெல்லாம் போட்டு சாகடிக்கிறார்கள்.

சீனாவெங்கும் அரசாங்கமே Red Star என்கிற ஒரு ‘சரக்கு’ விற்பதாக ஜார்ஜ் சொன்னான். “சர்ருனு தூக்கிடும் மாமே, அல்லாரும் சாய்ங்காலம் டின்னர்ல தம்மாத்துண்டு டேஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்” என்று சவால் வேறு!

எங்கள் இருவருக்காக மட்டும், அந்த ஹுடாங் இல்லத்தரசி வேகவைக்கப்பட்ட பீன்ஸ், சோயா பீன்ஸ், டோஃபூ என்று ஏதோ பண்ணியிருந்தாள். எங்கள் டூரில் வந்திருந்த பாக்கி அத்தனை நான்வெஜ் பார்ட்டிகளுக்கும் ஒவ்வொரு லஞ்சும், ஒவ்வொரு டின்னரும் கொண்டாட்டம்தான். அட்லீஸ்ட் 5 வகை மாமிச, மீன் பதார்த்தங்கள் ஒவ்வொரு சாப்பாட்டின்போதும். கண்டிப்பாக ஒரு பீஃப் ஐட்டம், ஒரு சிக்கன் ஐட்டம், மீன் ஸம்திங், அப்புறம் பெயர் தெரியாத ஒன்றிரண்டு பிரட்டல், வதக்கல் ஐட்டங்கள். ஆளாளுக்கு ஐட்டத்தின் பெயர்கூடக் கேட்காமல் அடித்துப் பிடித்துத் தின்றது எங்கள் கோஷ்டி. சாப்பிட்ட பிறகு சில ஐட்டங்களின் பெயர், செய்முறை கேட்டறிந்ததும், பரம்பரை நான்வெஜ்ஜர்களே பேஸ்தடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சி!

சாப்பாட்டில் சீனர்கள் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் தச்சி மம்மம் ரூல்ட் அவுட். ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் எல்லா லஞ்ச், டின்னர்களிலும் சாப்பிடுவதற்குக் உள்ளங்கை அகல குட்டிக்குட்டி ப்ளேட்டுகளையே தருகிறார்கள். நம் ஊரில் அந்த மாதிரி சின்ன ப்ளேட்களில் சைட் டிஷ் வைத்துக்கொள்வோம். இங்கேயோ அதுதான் மெயின் ப்ளேட். கடித்துப்போட்ட எலும்புத் துண்டுகளை எங்கே போடுவதென்று தெரியாமல் எங்கள் சகாக்கள் பேய் முழி முழித்தார்கள். ஒருவேளை சீனர்கள் அவற்றையும் மீதம் வைக்காமல் முழுங்கி விடுவார்களோ?!

Photobucket

நல்லவேளையாக எல்லா சாப்பாட்டு நேரங்களிலும் மறக்காமல் சாதம் கொடுத்து விடுகிறார்கள். சாதமென்றால், ஐ ஆர் 8, கிச்சிலி சம்பா, பாஸ்மதி என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. கையா முய்யா என்று கையில் ஈஷிக்கொள்ளுமே அந்த Sticky Rice வரைட்டி மட்டுமே எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது. காக்காய்க்குப் போடுவது போல் அது உருண்டு திரண்டு ஒரு தினுசாக நிற்கும். அல்லது பாத்திரத்தைவிட்டே வெளிவர மனமில்லாமல் அங்கேயே ஒட்டி உறவாடும். அம்மாவிடமிருந்து கைக்குழந்தையைப் பிரிப்பது போல் அதை லாகவமாக வெளிக் கொணர்வதே ஒரு தனிக் கலை.

நூடுல்ஸ், சௌமீன், ஸ்பிரிங்ரோல்ஸ் என்று வெஜ் ஐட்டங்கள் அவ்வப்போது ஏதாவது கிடைத்தாலும் அதில் ஒரு pork, fish sauce, oyster sauce என்று ஏதாவது கலப்படம் கண்டிப்பாக இருந்தே தீரும் என்பது அநுபவ பாடம். தப்பித்தவறி வெஜிடேரியன் ஐட்டம் என்று ஏதாவது ஒன்றைக் கொண்டுவந்து வைத்தாலும் சக நரமாம்சபட்சிணிகள் பாய்ந்தடித்து அதை முதலில் காலி பண்ணிவிட்டுத்தான் சிக்கன், மட்டன் என்று தொடர்வது வழக்கம். சோத்துச் சண்டை வேண்டாமென்று நாங்கள் ஒதுங்கி விடுவோம்.

மிளகாய்ப்பொடி மாதிரி பல இடங்களிலும் hot sauce என்று கேட்டால் கொடுத்தார்கள். ஸ்டிக்கி ரைஸ் சாதத்துடன் அதைக்கலந்து, என் மனைவி முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் மேட் கருவேப்பிலைத் தொக்கு, புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி என்று ஏதாவது சில்மிஷம் பண்ணி நாங்கள் பசியாறினோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஏரியாவில் Trader Joe’s என்றொரு ஸ்பெஷாலிட்டி சூப்பர் மார்க்கெட் செயின் படு பிரசித்தம். அங்கே Madras Lentils, Punjab Eggplant, Dal Makhani, Jaipur Vegetables என்று சில பாக்கெட்கள் வாங்கி எடுத்துச் சென்றிருந்தோம். பாதியில் பிடுங்கிக்கொண்டு சட்டைகளை நனைக்காதபடி பிரமாதமாக சீல் பண்ணி இம்போர்ட் செய்திருப்பார்கள். சில இடங்களில் மைக்ரோவேவ் செய்து அல்லது மைக்ரோவேவ் இல்லாத இடங்களில் அப்படியே கூட சாப்பிடலாம், சாப்பிட்டோம், நல்ல டேஸ்ட்.

சாப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு விஷயம்: எல்லா இடங்களிலும் சைனாவில் நல்ல காஃபி கிடைக்கிறது . டீ தான் எங்குமே பிரபலம் என்றாலும் பெரிய ஹோட்டல்களில் நல்ல காஃபிக்கு பஞ்சம் இல்லை என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் சீனர்கள் விரும்பி எப்போதும் சாப்பிடுவது டீயே. டீ என்றால் நம் ஊர் மாதிரி பால், சர்க்கரை எல்லாம் கலந்தடித்த சாயா அல்ல.

க்ரீன் டீயை எல்லா இடங்களிலும் வெந்நீரில் போட்டு வைத்திருக்கிறார்கள். பல பேர் இதைக் கையோடு ஃப்ளாஸ்கில் கொண்டுசென்று அவ்வப்போது தண்ணீர் குடிப்பதுபோல் குடிப்பதையும் நான் கவனித்தேன். கொழுப்பு, கொலஸ்ட்ரால் இவற்றைக் குறைக்கவல்ல க்ரீன் டீ ஒரு நல்ல வழக்கம். இந்திய டயடீஷியன்களும் இதை ரெகமெண்ட் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அமெரிக்க டூரிஸ்ட்களை இப்படி வெயிலில் காயடித்தால் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திரும்ப ஓடிப்போய் விடுவார்கள் என்கிற பயத்தில், ”சாப்பாட்டுக்குப் பிறகு ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட்” என்று ஜாக் சொன்னான்.

டின்னருக்கு ‘ரோஸ்டட் பீகிங் டக்!” என்றான் ஜார்ஜ். ஏதோ ஸ்பெஷல் ரெஸ்டாரண்டிலாம். எங்களைப் பார்த்து “அங்கேயும் ஏதாவது வேகவைத்த காய்கறி அல்லது ...” என்று ஆரம்பித்தவனை இடைமறித்த நான் இன்றிரவு எங்களுக்கு உபவாசம் என்று சொல்லிவிட்டேன்!

இதையெல்லாம் இப்பொழுது எழுதும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. அங்கே இருந்த இரண்டு வாரங்களில் நாங்கள் தெருக்களில் பார்த்த மொத்த நாய்களின் எண்ணிக்கை மூன்றே மூன்று!

(தொடரும்)

7 comments:

கானகம் said...

அன்புள்ள எல்லேராம்,

உங்களின் சீனப் பயணக்கட்டுரைகள் நான்கையும் தற்போதுதான் முழுசாய் படித்து முடித்தேன். கொஞ்சம் மணியன் வாசனை அடித்தாலும், சீன வரலாறு, சீனாவின் தற்போதைய நிலை, கொஞ்சம் அரசியல், நிறைய நகைச்சுவை எனப் போவதால் படிக்க சுவாரசியமாய் இருக்கிறது.

முதல் பாகத்தில் கத்தார், எமிரேட்ஸ் விமானங்கள் பற்றிய உங்கள் கருத்து மிக உண்மை. கொஞ்சம் காஸ்ட்லியாய் இருந்தாலும் எப்போதும் கத்தார் ஏர்வேஸிலேயே போய்விடுவது. ஓமான் ஏரில் பிஸினஸ் கிளாஸ் கிடைத்தாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்துவிடாதீர்கள். அது கத்தார் ஏர்வேஸின் எகானமியை விடக் கேவலமான சீட், நோ டி.வி, சூடான கேபின் என நரக பயண அனுபவத்தைக் கொடுக்கும்.

இன்னும் நிறைய எழுத இருக்கும் போல.. எழுதுங்கள்..இடைவெளியெல்லாம் குழந்தைகளுக்கு இடையே விடுங்கள்.. தொடரை இடைவெளியின்றி எழுதுங்கள்.

அன்புடன்,

ஜெயக்குமார்

ILA (a) இளா said...

இந்தப் பகுதி முழுக்க சோத்துக்கு சிங்கி அடிச்ச கதைதான் அதிகமிருக்கே.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இளா,

ஒருத்தர் என்னடான்னா சாப்பாட்டு விவகாரங்களை விலாவாரியா எழுதுங்கன்றார்.

நீங்க சோத்துக்கு சிங்கி அடிச்ச கதை டூ மச்ன்றீங்க!

அதனாலதான் நான் யாரு சொல்றதையும் கேட்காம எனக்குத் தோணினதை எல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ‘கானகம்’ ஜெயக்குமார்,

‘இடைவெளியெல்லாம் குழந்தைகளுக்கு இடையே விடுங்கள்.. தொடரை இடைவெளியின்றி எழுதுங்கள்’ நெத்தியடி!

ரசித்தேன்!

டகிள் பாட்சா said...

டியர் ராம்
அட்டகாசம். ரஜினி படங்களை போல 2 வருஷத்திற்கு ஒரு posting வந்தாலும் அட்டகாசம். சைனாவின் 4 பாகங்களும் உண்மையிலேயே மிக அருமை. ஒரு நீண்ட பயணம் மீண்டும் உங்கள் எழுத்திற்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறது. வரிக்கு வரி ரசித்தேன். உங்களின் இயற்கையான நையாண்டி ரொம்ப நாளைக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து எங்களை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. என்னை போன்ற வெஜிடேரியன்கள் ஊர் ஊராக சுற்றும் போது ஏற்படும் அவஸ்தைகளை ரொம்ப தத்ரூபமாக எழுதியிருக்கிறீர்கள் (நா பயந்தது சரிதான். அதனாலதானெ சைனா ப்ராஜக்டெல்லாம் வந்தாலும் வேண்டவே வேண்டாமின்னு இருக்கேன்).

ஆமா! கடைசியா எழுதியிருக்கீங்களே ‘நாலஞ்சு நாய்களத்தான் பாத்தேன்’ ந்னு. ஒருவேளை நாய்கறி அங்கே ஸ்பெஷலோ என்ன எழவோ. உம் கூட வந்தவர்கள் சாப்பிட்டது உவ்வே!

இதே ஜோருடன் நிறைய எழுதுங்கள்! காத்திருக்கிறோம்.

துளசி கோபால் said...

எல்லா நாயையும் மீட் ஆக்கி இருப்பாங்களோ?

சோத்துக்கு அல்லாடுறது, மகா கஷ்டம். அதுவும் நம்ம நாக்கு இருக்கே..... மகா நீளம் இல்லையோ!

டொமாட்டோ ஸாஸ் எடுத்து அதுலே மிளகுதூளையும் உப்பையும் கலந்து வெந்நீர் கொண்டுவரச்சொல்லி கலந்து தக்காளிரசமாக்கி வெறுஞ்சோத்தில் கலந்து தின்ன அனுபவம் நினைவுக்கு வருது. ஹாங்காங்கில் ஒரு கப்பலில் கொடுத்த டின்னரில் நமக்குத் தின்ன ஏதும் கிடைக்கலை 29 வருசம் முன்னால்:(

Anonymous said...

It is not true that the chinese have a lower tolerance for alcohol. They are notorious drunkards. If you can't binge drink, you can't close a deal with them.