மார்ச் மாதத்திலிருந்தே சுட்டெரிக்கும் சென்னை சூரியன் பற்றி எனக்கு காபரா செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்ற வருடம் ஏப்ரலில் காய்ந்து கருகி வியர்த்து, பாதி மாதத்திலேயே பாய்ந்தோடி எல்லே திரும்பியது நினைவில் சூடாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்!
‘வெயிலோடு உறவாடி, வெயிலோடு விளையாடி’ யெல்லாம் பாட்டில் கேட்க மட்டுமே ஆனந்தம். இந்த வருட 2010 வெயில் என்னை அந்த அளவுக்கு போட்டுச் சாத்தி விட்டது.
ஏப்ரல் முதல் வார சென்னையில் ஒரு பின்னிரவு நேரத்தில் வந்து இறங்கியபோதே எரிச்சல். ஹாங்காங்கிலிருந்து லக்கேஜ் கட்டக்கடைசியாக வந்து சேர்ந்தது. வழக்கம்போல் ஏர்போர்ட் மகானுபாவன்கள் ஏர் கண்டிஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார்கள். (டிபார்ச்சர் லவுஞ்சிலும் ஏசி, ஃபேன் எல்லாவற்றையும் இரவு நேரங்களில் எப்போதும் ஆஃப் செய்து- வேண்டுமென்றே ஃபேன் கனெக்ஷன்களைத் துண்டித்தும் வைத்து- பிரயாணிகளை நாறடிக்கும் ஒரே இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்கிற பெருமை சென்னைக்குப் பல வருடங்களாகவே உண்டு).
வர வேண்டிய காரைக் காணோம். ஏழெட்டு தடவை போனுக்குப் பிறகு தூக்கம்+சப்பைக் கலக்கத்தில் டிரைவர் “சார், இன்னிக்கா வரீங்க? நாளைக்குன்னுல்ல நெனச்சேன்!”
என்றைக்குத்தான் அந்த ஏர்போர்ட்டைச் சரிசெய்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். லக்கேஜை வெளியில் உருட்டிக்கொண்டு வரும்போதே கரடுமுரடான, மேடுபள்ளப் பாதையில் எல்லாமே சாய்ந்து கொட்டுகிறது. நான் மட்டும் தனியாக அல்ல, சக பிரயாணிகளும் இருட்டில் அல்லாடுகிறார்கள். ‘டிரைவரைக் காணோமே’ என்று இருட்டில் அலையும் என் போன்ற திக்கற்ற பார்வதிகளைக் குறிவைத்தே ஒரு கழுகு வியாபாரிக் கூட்டம் அலைகிறது. “சார், நம்ம வண்டில வாங்க சார்”, “டேய், என்கிட்ட மோதாதே, சாரு என்னியத்தான் மொதல்லியே பார்த்தாரு. இல்லியா சார்?”, “இப்ப இன்னான்ற நீயு?”- குப்பென்ற சாராய நெடி.
தலையில் அடித்துக்கொள்கிறேன்.
அங்கீகாரமில்லாத ஓட்டை வண்டி, செக்யூரிடிகளுடனும், பார்க்கிங் குத்தகைக்காரர்களுடனும் மல்லுக்கட்டும் லுங்கி டிரைவர், அநியாய விலை- எல்லா எரிச்சலையும் தாண்டி காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வண்டியை விடச் சொன்னேன். போகும் வழியில் ஒரு திடீர் யோசனை. தி. நகர் ஆபீசில் எட்டிப்பார்த்து விட்டுப் போனாலென்ன? 24 பை 7 தானே!
ஆபீசின் ஏசி சுகமும், கெஸ்ட் ஹவுசின் புதுப் படுக்கை, தலையணையும் காஸ்மோபாலிடன் ஐடியாவையே என்னை கேன்சல் செய்ய வைத்தன. தூக்கக் கலக்கத்தில் கிளப் ரிசப்ஷனிஸ்ட் “என்ன ரிசர்வேஷன்? ஏது ரிசர்வேஷன்? எதுக்காக ரிசர்வேஷன்” என்று அனத்தியதும் இன்னொரு காரணம்.
படுக்கும்போது கிட்டத்தட்ட விடிகாலை நாலு மணி ஆகிவிட்டாலும், அதிக நேரம் தூங்கமுடியவில்லை. சீக்கிரமே எழுந்து காஃபியைத் தேடி அலைய ஆரம்பித்தேன். ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகளில் கொஞ்சம் ‘மினுக் மினுக்’கென்று வெளிச்சம் தெரிந்தாலும், இந்த நகரம் விழித்துக்கொள்ள இன்னும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகுமென்பது தெரிந்து மேலும் மேலும் நடக்க ஆரம்பித்தேன்.
ஏழு மணி வாக்கில் முருகன் இட்லி உபயத்தில் ‘ஜகதோத்தாரணா’ என்று பாடமுடிந்தாலும், வெயில் சுளீரென்று பின் கழுத்தில் இறங்குவதையும், வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதையும் நினைத்து, “ஆஹா, வசம்மா ம்ம்ம்மாட்டிக்கிட்டம்” என்று மனது அழுவாச்சியாவதை மறுக்க முடியவில்லை!
(தொடரும்)
2 comments:
அடடா வெயில்டா, செம வெயில்டா.. அழுக்கா சிரிச்சா லைலா புயல்டா..(டா எல்லாம் மரியாதைக்கு எழுதியது):)
ப்ரிபெய்டு வண்டிங்கதான் இப்பக் கிடைக்குதே. அதுலே வந்துருக்கலாம்.
சென்னை வெய்யிலே தேவலை. இப்ப நான் இருக்கும் இடம்..... சண்டிகர்
கருகிப்போயிட்டேன்:(
Post a Comment