என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, February 18, 2010

ஆள், படை, அடியாள் சேனை, அடிப்படைத் தேவை!

சில வருடங்களாகவே தமிழகத் தலைநகரமான சிங்காரச் சென்னை, கொலைநகரமாக உருவெடுத்து வருவதைக் கவலையுடன் படிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கிச்சூடுகள், என்கௌண்டர்கள், ரவுடிகள் மோதல், அசோக் நகர், அண்ணா நகர் போன்ற மேல்தட்டுக் குடியிருப்புகளில் கூட அடுக்கடுக்கான கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, போதை மருந்துக் கும்பல் என்று பத்திரிகைகள் அன்றாடம் அலறுகின்றன.

ஆட்சியாளர்கள் காதில் இதெல்லாம் விழுகிறதா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வால் பிடித்து ஜால்ரா போடவே போலீசுக்கு நேரம் போதவில்லை போலும்!

சென்னையில் எனக்குத் தெரிந்து பல நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் சின்னச்சின்ன அடியாள் கும்பல்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதோ இல்லையோ, கட்டைப் பஞ்சாயத்தில் நமக்குத்தான் அகில இந்தியாவிலும் முதலிடம்!

சென்ற வருடம், தி. நகரில் “எங்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தாதே” என்று தாடி நடிகர் ஒருவரின் வீட்டு வாசலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட அவர்கள் வீட்டு அடியாள் கும்பல், தயாராக வைத்திருந்த உருட்டுக் கட்டைகளுடன் கார்களை அடித்து நொறுக்கி, மிகவும் சாதாரண, நடுத்தர வர்க்க, பொறுப்புள்ள வேலைகளில் இருக்கும் குடிமக்களை அடித்து, உதைத்து, கை கால்களை உடைத்து விரட்டிய சம்பவம், என்னை சென்னை பற்றியே திகிலுறச் செய்கிறது.

அடிதடிகளில் கொஞ்சமும் பரிச்சமில்லாத என் நண்பன் ஒருவன், வாக்குவாதத்தை தடுக்கப்போய், தர்ம அடி வாங்க நேர்ந்த விழுப்புண்களை என் கண்முன் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ப்ளாட்ஃபாரம் ஓரமாகத்தான் காரை நிறுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். உருட்டுக்கட்டைப் போர்ப்படை வீரர்களை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பது உண்மை.

டாடா சுமோவிலும் ஆட்டோக்களிலும் ஏதாவதொரு கட்சிக் கொடி போட்டுக்கொண்டு விட்டால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாமா?

அசந்தர்ப்பமாக எங்கேயோ ஏதோ ஜோக் அடிக்கப்போய், அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே, அடுத்து இன்னொரு பயங்கரம்!

அஜீத் பெயரைச்சொல்லி ஒரு அடியாள் கும்பல் ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு புகுந்து காரை நொறுக்கியதாம்.

பத்திரிகைகளில் போடுகிறார்கள், டீவியில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே சில்லறைக் கட்சி சித்தர்கள் ஓவராக உதார் விடுவது, மகா கேவலம்!

என்று தணியும் இந்த தீவிரவாத மோகம் ?!

3 comments:

ப.கந்தசாமி said...

இதுவே தமிழ்நாட்டின் வாழ்க்கை முறையாகப்போய் விட்டது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்

M Arunachalam said...

தமிழனென்று சொல்லடா !

தடியெடுத்து கொல்லடா !!

தலைகுனிந்து நில்லடா !!!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கக்கன் ஆட்சி அமைக்கிறோம், காமராஜர் ஆட்சி அமைக்கிறோம் என்றெல்லாம் பம்மாத்து பண்ணிக் கொண்டிராமல், மக்களுக்கு உண்மையாகவே நல்லதைச் சொல்ல, செய்ய அரசியல்வாதிகள் யாருமே இன்றைய காலகட்டத்தில் தயாராக இல்லை என்பதே உண்மை.

நமக்கு இன்றைய உடனடித்தேவை தொலைநோக்குடைய தேசீயவாதிகள் (statesmen), அரசியல் வியாதிகள் இல்லை!