என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, January 03, 2010

தக்கார், தகவிலர், தரூர்!

சஷி தரூரை நான் சென்ற ஆண்டு (2009) ஆரம்பத்தில் சந்தித்தேன்.

அப்போது தான் சென்னையில் ’பிரவஸி பாரதிய திவஸ்’ நடந்து முடிந்திருந்தது

என் சென்னை நண்பன் வீட்டில் ஒரு பார்ட்டி. ஹைகோர்ட் ஜட்ஜ்கள், சென்னையின் பிரபல புள்ளிகள் தவிரவும், தென்னாப்பிரிக்கத் தமிழ் பிசினஸ் புள்ளிகள், தமிழ் சினிமா பேர்வழிகள், ஆங்காங்கே கொஞ்சம் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என்று கலந்து கட்டியான, விவரமான புத்திசாலிக் கூட்டம்.

வாழ்நாளில் பெரும்பாலும் வெளிநாட்டில் கழித்திருந்த, ஐ.நா அமைப்பில் வேலை பார்த்த புத்திசாலி பிரமுகராகவே சஷி எனக்கு அறிமுகமானார். (அப்போது நான் அவருடைய The Great Indian Novel படிக்க ஆரம்பித்திருந்தேன், முடித்திருக்கவில்லை). சஷி, கேரளாவில் காங்கிரஸ் டிக்கெட்டில் நிற்கப்போவதாக அப்போதே பேச்சு அடிபட்டது. அவ்வப்போது இந்தியா வந்து போகும் பெரிய என்ஆர்ஐ புள்ளிகளில் ஒருவராகத் தான் அவர் தெரிந்தார்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சி, எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படையான கருத்து என்று ஒரு உருப்படியான ஆளாக இருக்கிறாரே, இவர் இந்திய அரசியல் கட்டாயங்களுக்குள் மாட்டி மீளுவாரா என்கிறாரா சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடியன் எம்.பி. ரூபி தல்லாவை சஷி அனுசரணையுடன் கவனித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்க பிசினஸ் பார்ட்டிகளுடன் நல்ல அரட்டை. பார்ட்டி நன்றாகக் களை கட்டி இருந்தபோது, சஷியுடன் கொஞ்சம் பர்சனலாக வம்பளக்கவும் நேரம் கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது கண்டிப்பாக மீட் பண்ணுவோம் என்றார்.

அதற்கப்புறம், அவர் திருவனந்தபுரத்தில் எலெக்‌ஷனுக்கு நின்று ஜெயித்தது, cattle class பற்றி ட்விட்டரில் கிண்டலடித்தது, அது என்னவென்றே புரியாமல், நம் அசட்டு, அழுமூஞ்சி அம்மாஞ்சி அரசியல்வாதிகள் அவரைக் கண்டித்தது, ராஜிநாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியது- எல்லாமே நீங்களும் படித்துத் தலையில் அடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சமீபத்தில் வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு மிகவும் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய சில விதிமுறை மாற்றங்களை உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தபோது, சஷி உடனே அதைக் கவலையுடன் கண்டித்தது மட்டுமல்லாமல், “மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் விசா வைத்திருக்கவில்லை!” என்ற நகைச்சுவை ’ட்வீட்’டுடன் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார்.

மறுபடியும் டிவிட்டரா என்று டெல்லியே கலவரப்பட்டது. தியாக ஜோதி அன்னை சோனியா சொன்னாரென்று ஓடிப்போய யாராவது சஷியின் ப்ளாக்ப்பெர்ரியைப் பிடுங்கித் தூர வீசிக் கடலில் எறிந்து விடுவார்களோ என்று நான் கவலை கொண்டேன்.

ஒரு ஜூனியர் அமைச்சர் இது மாதிரி எல்லாம் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று சீனியர் எஸ். எம். கிருஷ்ணா அவரைக் கண்டித்ததும், ‘இதையெல்லாம் நாலு சுவர்களுக்குள் மட்டுமே நாம் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்’ என்றதும் நீங்களும் படித்திருப்பீர்கள்.

நம் பழுத்த அரசியல் பெருச்சாளிகள் ஊழல் கோமாளிகளையும், கூஜா ஜால்ராக்களையும் மட்டுமே சகித்துக்கொள்வார்கள் என்பது தெரிந்ததே. சஷி தரூரின் புத்திசாலித்தனம் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. He is so out of place among our old jokers!

இந்தியாவின் அபத்த அரசியல் சித்து விளையாட்டுகளை சஷி தரூர் தாக்குப் பிடிப்பாரா? ‘தாவோஸ்’ மாதிரி வேறெங்கும் வெளிநாட்டு ஐ. நா. வேலைகளுக்குத் தாவி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1 comment:

ஆயில்யன் said...

//இந்தியாவின் அபத்த அரசியல் சித்து விளையாட்டுகளை சஷி தரூர் தாக்குப் பிடிப்பாரா? ‘தாவோஸ்’ மாதிரி வேறெங்கும் வெளிநாட்டு ஐ. நா. வேலைகளுக்குத் தாவி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?///


காமெடியனாகவே பார்க்கப்படுகிறாரோ என்ற நினைப்பு உண்டு - நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு ஹைடெக் மினிஸ்டரை அப்படித்தானே பார்ப்பார்கள்!

எது எப்படியோ இப்படியே போய்க்கொண்டிருந்தால் கட்டாயப்படுத்தியே ஆளை விரட்டிவிட்டுவிடுவார்கள்!