என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, August 22, 2005

பிறந்தகப் பெருமை -6

சென்னையிலிருந்தோ, மதுரைப் பக்கத்திலிருந்தோ மயிலாடுதுறை ஜங்ஷனில் வந்து இறங்குகிறோம். இரும்புக் கீறல், வெப்பத் தும்மல், நீராவி விக்கல், முனகல், சோர்வுடன் புகைவண்டி 'தஸ், புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு நிற்பதற்குள்ளாகவே வெளியே தலை நீட்டி, நமக்கு வேண்டியவர்கள் யாராவது கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம்.

காருடை காருண்யவான் நண்பர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் ஆனந்தக் கூத்தாடும் நெஞ்சம். எங்கள் வீட்டுச் சொந்த வண்டியை எல்லாம் எந்தக் காலத்திலேயோ விற்று விட்டாலும், அவ்வப்போது ஒரு வில் வண்டியோ, ஒற்றை மாட்டு வண்டியோ, மாமா புண்ணியத்தில், யாராவது எங்களுக்கு ஓசியில் அனுப்பி வைப்பது வழக்கம். உள்ளூர் நிலச் சுவான்தார்கள் சில இரட்டை மாட்டு வண்டிகளை என் தற்கால '05 7 சீரிஸ் பிஎம்டபிள்யூ'வை விட பெட்டராகவே மெயிண்டெய்ன் பண்ணி வைத்திருப்பார்கள். வண்டியில் கிளி கொஞ்சும். மாடுகளும் கொழு கொழுவென்று நமீதா கணக்காக இருக்கும். சலங்கைச் சத்தமும் சாட்டைச் சீறலும் அட்டகாசம் தான். ஓடும் வண்டியின் எழுந்து நின்று தலைப்பாக் கட்டை ஒரு இறுக்கு இறுக்கினால், அப்படியே படையப்பா தான்.

என் பூர்வாசிரமக் குடில் இருக்கும் நல்லத்துக்குடி கிராமம் மாயவரம் டவுன் ஸ்டேஷனுக்கு மிகச் சமீபம்.

ஊரிலிருந்து வீட்டு வேலைக்காரரோ, நண்பர்களோ, யாராவது ஸ்டேஷனுக்கு வந்திருந்தால் பிரச்னை ஏதும் இல்லை. அரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்து விடலாம். அதுவும் பெரிய கடைத் தெரு, மணிக்கூண்டு வழியாகச் சென்றால் ஜாலியாக வீட்டுக்குக் கொஞ்சம் புதுக் காய்கறி, பழங்கள், கதம்பம், அன்றைய ஹிண்டு, எக்ஸ்பிரஸ், தினத்தந்தி, விகடன், குமுதம், கல்கண்டு, மாமாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று ஏதாவது கையோடு வாங்கிக்கொண்டும் போய் விடலாம்.

யாருக்கும் கடிதம் எழுதாமல், எதுவுமே தெரிவிக்காமல், திடீரென்று ஜங்ஷனில் வந்து விடியற்காலை இருட்டில் 'பொத்'தென்று குதித்த காலங்களும் உண்டு.

ஜங்ஷனின் விடியற்கால நறுமணக் கலவை அதி தீவிர தனித் தன்மை கொண்டது. 'ஜில்' தண்ணீர் மேலே பட்டதால் கோபித்துக்கொண்டு பொசுங்கும் எரிநாற்ற நிலக்கரி, நடைவண்டிகளின் இளைத்த சோனித் தேநீர் வாசனை, இன்னமும் மாற்றப்படாத, அவற்றிலேயே தூங்கி எழுந்திருக்கப்பட்ட, யூனி·பார்ம்களின் வியர்வைக் கொடுமை, கேண்டீனில் பொடி தூக்கலான சாம்பாரின் நறுமணம், ஸ்லீப்பர் கட்டைகளின் மீதும், பாத்ரூம் பக்கமாகவும் அவசரமாக வீசப்படும் அபரிமிதமான ப்ளீச்சிங் பவுடரின் கோர நெடி, 'இஷ்ட்ராங்' பினாயில், கொசு மருந்து, ஸ்டேஷன் வந்தவுடன் அத்தனை பேருக்கும் உடனே அவசரமாக வந்து தொலைத்து விட்ட ஆய், மூச்சா+ப்ளஸ் காஸ், இந்திய ரயில்வேயின் ஓப்பன் டாய்லெட் மகிமை- எல்லா சுகந்த வாசனைகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாசியைக் 'குபீரெ'ன்று பதம் பார்ப்பதில் ஒரு குமட்டு குமட்டி, ஸ்டேஷனில் காலை வைத்தவுடன், 'உவ்வே' என்று பலரும் அதிகாலை வாந்தி எடுப்பது சகஜம். அதில் பித்தம் ஏதுமில்லை. பைத்தியம் சத்தியமாக இல்லை. உடனே ஒரு தமிழ்ப்பட டாக்டர் ஓடி வந்து மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்து, கண்ணாடியைக் கழட்டியபடியே 'கன்கிராஜுலேஷன்ஸ்' எல்லாம் சொல்லமாட்டார்.

நம்மை வரவேற்க இன்று யாரும் வந்ததாகத் தெரியவில்லை என்று சொன்னேன், இல்லையா? உஷார். இப்பொழுது தான் ஜங்ஷனை விட்டு சர்வ ஜாக்கிரதையாக வெளியேற வேண்டும்.

இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் சற்றே அறுந்த ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை உத்தேசமாக நெத்தியபடி, 'பட்டிக்காட்டான் யானை பார்த்த கதை'யாக, 'ஆட்டோவில போவமா, இல்லை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பஸ்ல போயி, அப்பறம் அங்கேயிருந்து ...' என்று கொஞ்சம் குழம்பித் தொய்வு நடை போட்டு, ஒரு சைடாக 45 டிகிரி ஆங்கிளில், மெதுவாக முன்னேறினால், போயே போயிற்று. உங்களுக்கு இன்று நேரம் சரியில்லை.

பொய்யோ, புனைசுருட்டோ, பாவமோ, அதிபர் புஷ் ஈராக்குக்குள் அவசர அவசரமாகத் 'திடு புடு'வென்று அநியாயமாக நுழைந்தாரே, அதே ஸ்பீடில், அதே ஸ்டைலில், ஜங்ஷனை விட்டு ஜல்தியாக வெளியேறினால் பிழைத்தீர்கள். இல்லையென்றால்?

"வாங்க கொழந்தை" என்று அன்புடன் வரவேற்பார் ஒரு குதிரை வண்டிக்காரர்.

'நம்மை எப்படி இவருக்குத் தெரியும்? கடந்த முறை இந்த முரட்டு மீசை + சோனி பனியன் + அழுக்கு லுங்கி ஆளை யார் நமக்கு அறிமுகம் செய்து வைத்தது? 1998-லா? அல்லது 2003? ஒரு வேளை நமக்குத்தான் அவ்வளவு மறக்க முடியாத அமிதாப் பச்சன் பர்சனாலிட்டியோ?' என்று ஏதாவது நீங்கள் குழம்ப ஆரம்பிப்பீர்கள். அசமஞ்சமாக நிற்பீர்கள். அவர் சிநேகமாகப் பல் காவி தெரியச் சிரிப்பார். சிவந்து கிடக்கும் அவர் கண்களை நேரடியாகப் பார்த்து 'கண்ணொடு கண் நோக்கி' விட்டீர்கள் அல்லவா? எல்லாமே போச்சு.

அய்யோ பாவம், இனி நான் உங்களுக்கு உதவ இயலாது. சாரி.

"என் கைகளில் பாணங்கள் ஏதுமில்லை. இதோ, நன்றாகப் பார்த்துக்கொள், ராமா, ரகுகுலவீரதிலகா. என் நினைவிலும் எள்ளளவும் தீய நோக்கம் இல்லை. நான் உன்னுடன் ஸ்நேகமாக இருக்கவே விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய் தசரத ராஜகுமாரா?" என்று கேட்டபடி இராமனை நோக்கிக் குகனோ, வாலியோ, அங்கதனோ முன்னேறியதாகக் கம்ப நாட்டார் விவரிக்கிறார் தன் இராம காதையில் ஏதோ ஒரு காண்டத்தில்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு சிச்சுவேஷன் இங்கே. கம்பன் பிறந்ததும் எங்கள் மாயவரம்-குத்தாலத் தலைமாட்டில் தானே!

"வாங்க, தம்பி. எங்க, பட்ணத்ல இருந்து தான வரீங்க? வீட்ல அம்மா சௌக்கியமா?"

இந்த ஒரு ஜெனரிக் கேள்வியின் pseudo அந்நியோன்னியத்தில், காதலில், நட்பில், ஜாரிப்பில் விழுந்து யாரும் பதிலுக்கு சிநேகமாகச் சிரித்து வைப்பார்கள். 'அம்மா' என்பது ஒரு அடிஷனல் P. வாசு செண்டிமெண்டுக்காக. நெவர் ஃபெயில்ஸ்.

'மேனிபுலேடிவ் சைகாலஜி, பாடி லாங்குவேஜ் இண்டர்ப்ரடேஷன்' ஆகியவற்றில் அநாயசமாக ஆக்ஸ்ஃபோர்டில் பி.ஹெச்டி வாங்கத் தகுதியுள்ள மேற்சொன்ன கு. வண்டிக்காரர் உங்களை ஒரு பெட்டியைக்கூடத் தூக்க விடாமல் உங்கள் அத்தனை சுமைகளையும் தன் சுகமான சுமைகளாகத் தன் சிரமேற்றிக் கொள்வார்.

"எத்தனை நாள் கழித்துத் திரும்ப வந்தால் தான் என்ன? நம்மை உடனே வரவேற்றுப் பணிசெய்யக் காத்திருக்கிறார்கள் நம் திருத் தொண்டர்கள். அடாடா, மாயவரம்னா மாயவரம் தான்" என்றபடி நடையில் ஒரு முறுக்குடன், நினைப்பில் ஒரு செருக்குடன், அசைவில் இப்போது ஒரு தெனாவட்டுடன், நீங்கள் நேராக, ஆங்கிள் எல்லாம் போய், முன்னேறுவது எனக்குத் தெரியும். அய்யகோ, ஊழ்வினை உங்களை உறுத்து வந்து ஊட்டுகிறது. யான் என் செய்வேன்?

நல்லத்துக்குடி-மாயவரம் சர்வதேச எல்லைக்கோட்டைப் பற்றி விலாவாரியாகச் சொல்ல இது நல்ல தருணம்.

Image hosted by Photobucket.com

எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.

தரங்கம்பாடி ரயில் பாதை சமீபத்தில் அழிந்தே போனது பற்றி நான் கொஞ்ச நாள் முன்பு சோகமாகத் தனிப் புலம்பல் புலம்பி இருந்தேன் அல்லவா? அதிலிருந்து இந்த 'மா. மு. லி' கருங்கல் உள் வாங்கி ஒரு இருநூறு, முந்நூறு அடி இருக்கலாம். அவ்வளவே. இந்தியத் தொல்பொருள் இலாலாவின் சர்வதேசக் கல்வெட்டு ஆய்வாளர்கள் 'மா.மு.லி' என்றால் 'மாயவரம் முனிசிபல் லிமிட்' என்று கண்டு பிடித்து என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள்.

நண்பர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இது புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமான இடம் தான். நீங்கள் இந்தக் கல்லில் தடுமாறிக் கலங்கி விடக்கூடாது என்பதற்காகவே ஒரு வரைபடத்தையும் நான் இத்துடன் கஷ்டப்பட்டு இணைத்திருக்கிறேன்.

வெளியே வந்து பார்த்தால் எல்லா நல்ல வண்டிகளையும், கார்களையும், ஆட்டோக்களையும் தாண்டிக் கடைசியில் எங்கேயோ அந்த லுங்கி மாரீசன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். "மொத்தம் ஐந்து மைல்களையும் இன்று நடந்தே தான் போய்த் தொலைக்கப் போகிறோமா?" என்ற பயங்கரக் கவலை, அந்தக் கடோசி கடைசி வண்டியைப் பார்த்ததும் ஓடிப் போய், வேறு புதுக் கவலைகள் வந்து விடும்.

'ஈதென்ன இவ்வண்டியின் சக்கரங்கள் சற்றே சதுரமாக இருக்கின்றன? உடம்பை விட எப்படி இந்தக் குதிரைக்குப் பற்கள் பெரிதாக இருக்கின்றன? இது குதிரை தானா அல்லது புராண காலத்து நரி-பரி கன்வர்ஷன் மேட்டரா? பசியில் அது ஏன் சாக்குப் படுதா, ரெக்சின் சீட் எல்லாவற்ரையும் கடிக்கப் பார்க்கிறது? சணலும் ப்ளாஸ்டிக்கும் எப்படி ஜீரணமாகும்? விலா எலும்புகள் துருத்தும் இந்தச் சோனி எப்படி இவ்வளவு சாணி போடுகிறது?'

நம் பயப் பிராந்தியை டெலிபதியில் புரிந்து கொண்ட பார்த்தசாரதி அர்ஜுனனின் கவலையைப் போக்கும் வகையில் சொல்வார்:

"பாக்கறதுக்குத்தாங்க கொஞ்சம் சோனியாத் தெரியும். கிண்டி ரேசுல ஓடிக் கப்பு வாங்கினதுல்ல இது. ஹய், ஹய், ஹேய்ய், ஏண்டா தலைப்பாவக் கடிக்கற? கொள்ளு வோணுமா?"

நாற்பதடி ரிவர்சில் நடந்தால் ஜங்ஷன் வாசல். இன்னமும் அங்கேயே தான் இருக்கிறது. திரும்பி விடலாமா என்று நீங்கள் வேகமாக யோசிப்பது அவருக்கா தெரியாது?

"நீங்க பின்னாடி ஏறிக்குங்க. முன்னாடி ஏறிக்கினாக் கொஞ்சம் சிரமப்படுவான் அஜீத்து'

யாராலும் ஜெயிக்கப்பட முடியாதவன் 'அஜீத்' என்கிறது வட நூல். கிண்டி குதிரைப் பந்தயங்களில் இவனை வைத்து ஜெயித்து ஜெயித்துத் தொடர்ந்து ஜெயம் கண்டு தான் எம். ஏ. சிதம்பரம் கோடிஸ்வரர் ஆனார் என்பது பொழிப்புரையின் உட்பொருள்.

அந்தச் சோனிக் குதிரையின் பளுஇழுதகுதி (புல்லிங் பவர், அப்படிப் போடுரா ராமா, ஆரு சொன்னது உனக்குத் தனித் தமிழ் வராதுன்னு) பற்றி நீங்கள் தலைசொறிந்து நிற்கையில், குதிரை வண்டி ஆரம்ப ஜோரில் கிளம்பியே விட்டது. (ஒண்ணும் பயப்படாம உள்ளாற வந்து குந்துங்க கொழந்தே)

'இது குதிரையா, தேவாங்கா? இந்த ஆள் நிஜமாகவே இதற்கு முன் ஜட்கா வண்டி தான் ஓட்டி இருக்கிறாரா அல்லது பூனை வண்டியா?' என்றெல்லாம் நீங்கள் மதி மயங்குமுன் வண்டிக்குள் நீங்கள் திணிக்கப்பட்டிருப்பீர்கள். வண்டி ஒரு தினுசாக ஓட ஆரம்பித்து விடும். வைக்கோலுக்குள் மறைந்து துருத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இரும்புக் கம்பியும் உங்கள் விலாவையும், பிருஷ்ட பாகங்களையும் பதம் பார்க்கையில், நீங்கள் வலியில் நோகையில், ஆக்சிஜனைத் தவிர வேறு எல்லாத் தீவிர நாற்றங்களும் கலந்த உள் வண்டிக் கொடுமையின் அவதியூடே அவர் கேட்பார், அந்த 64 மில்லியன் டாலர் கேள்வியை:

"ரயில்வே கேட்டுக்கு இந்தால தான அய்யா வூடு?"

இந்த 'இந்தால, அந்தால' தான் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, ஐ. நா. சொங்கி கோஃபி அன்னன் கவனிக்க வேண்டிய, அத்தியாவசியக் கேள்வி.

"இல்ல. வந்து... அது வந்து.... கேட்டுக்கு அந்தால, புள்ளையார் கோவில் தாண்டின உடனேயே, பக்கத்திலேயே ....." ஈனஸ்வரத்தில் நான்.

இதனைச் செவி மடுத்த புரவி சரேலென அதிர்ந்து நிற்கும். கனைக்கும். நுரைக்கும்.

ரயில்வே கேட் என்பது சற்று மேடான பகுதி தான். சோனிக் குதிரைகளும், ஒல்லிப் பலிமாடுகளும் அங்கே நுரை தள்ளிப் பயம் கொள்ளும் தான். அதற்காக அது ஒன்றும் காஞ்ஜன்ஜங்காவோ, கைலாசகிரியோ அல்லவே.

குதிரைவண்டிக்காரரின் குரல் சற்றே மாறுபட்டு விரோதமாக இப்போது ஒலிக்கும்: "கேட்டுக்கு அப்பாலன்னு நீ மொதல்லயே சொல்லி இருந்தியின்னா சவாரியே வந்திருக்க மாட்டனே"

எங்கே நடந்தது தவறு? ஏன்? எப்படி நடந்தது? விளி மரியாதை எப்படி ஒருமைக்குத் திடீரென்று குறைந்தது? ஊஹும். யோசிக்க நேரமில்லை.

மழை காலங்களில் பெருமாள் கோவில் அருகே பாதையில் ஓரடி ஆழச் சேற்றுப் புதைகுழி இருப்பது உண்மை தான். ஆனால் சமீபத்தில் இங்கே மழை பெய்து ஒரு ஆறு மாதமாவது இருக்கும் போல் இருக்கிறதே?

"கொள்ளு என்னா வெல விக்குது தெரியிமில்ல? என்னவோ தெரிஞ்ச பையனா இருக்கியே, அய்ரு பையன், அய்யோ பாவம், போனாப் போவுது பொடியன்னு சவாரி ஏத்தினாக்க, மலை ஏறித் தரை எறங்குடாங்கற. இது அடுக்குமாய்யா? அந்த ரயில்வே கேட்டாண்ட அச்சாணியே முறிஞ்சிடும்ல? வண்டிச் சத்தம் நூறு ரூவாய்க்குக் கொறயாது. வேணுமின்னா கேட்டுக்கு இந்தாண்ட எறக்கி வுட்டுடறேன். இன்னா சொல்ற?"

கேட்டைத் தாண்டியபடி 'இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை நெத்தியபடிப் புழுதி மண்ணில் நானா?'

என் கிராமத்து மறு-பிரவேசம் இப்படியா சோகப் பின்னணியுடன் ஆரம்பிக்க வேண்டும்? ராமராஜன், விஜயகாந்த் போன்ற தமிழ்ப்பட ஹீரோக்கள் மட்டும் எப்படி ஒரே ஒரு காலிப் பெட்டியுடன், இளையராஜா பாட்டுடன், சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்கள்?

"கேட்டைத் தாண்டினதும் கொஞ்சம் தூரம் தான்"

"அந்தப் பாழாய்ப் போன கேட்ல தாம்பா ரெண்டு குதிரைங்க செத்துப் பொழைச்சிருக்கு. ஒரு இருநூறு ரூவா குடுத்தியின்னாக்க ..."

இருநூறு கொடுப்பதாக மௌனமே சம்மதமாக அறிவித்தவுடன் அந்தக் குதிரையும் சந்தோஷமாக ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் கேட் கிராசிங்கை நெருங்கியவுடன், "வண்டி குடை சாஞ்சுருக்கூடாதில்ல. உங்க பொட்டிங்களக் கையில எடுத்துக்கிட்டுக் கொஞ்ச தூரம் நடந்தே வந்திருங்க தம்பி"

மறுபடி மரியாதை கூடும். கேட்டுக்கு இந்தப் பக்கம் சம தரையில் இறங்கி அத்தனை லக்கேஜுகளையும் இறக்கிச் சுமந்து பிறகு மலையேறி இறங்கி, அந்தப் பக்கம் திரும்பவும் எல்லாவற்றையும் வண்டிக்குள் அடுக்குகிற கொடுமைக்கு வீட்டுக்கு நடந்தே போய்த் தொலைத்து விடலாம்.

இந்த லக்கேஜ் இறக்குமதி-ஏற்றுமதி லாவண்யங்களை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கும்.

"வாங்க கொழந்தே, மெட்ராஸ்ல இருந்து வரீங்களா? ஒரு பி.டி. கார்ல வந்திருக்கக் கூடாதுங்களா? ஈஜியா இருந்திருக்கும்ல?"

"இன்னா பாய், குதிர நொர தள்ளுது? மாரடைப்புல இப்டித்தான் அன்னிக்கு ஒரு மாடே செத்துப் போச்சு இந்த மோட்டாண்ட"

"டேய், டேய், பையா, குதிரக்குப் பின்னாடி போய் இன்னாடா பண்ற? குச்சியால அங்க குத்தாத. குதிர துள்ளினாக்க வண்டி கொட சாஞ்சிடும்கறேனில்ல?"

"இருங்க நடவாளுங்க ரெண்டு பேரக் கூட்டியாரேன். வண்டிய அப்படியே 'ப்ளசர் கார்' கணக்காத் தள்ளிக்கிட்டே போயிரலாம்"

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

உறவுகளின் உபயகுசலோபரி விசாரணைகள் நட்ட நடு வாசலிலேயே ஆரம்பிக்கும்.

"ஏண்டா ஒரு கார்டு போட்ருந்தா, சின்னப் பண்ணை வண்டி அனுப்பி இருப்பாரே?"

"எதுக்குடா குதிரை வண்டில வந்தே? சொல்லியிருந்தா தாஸ் கார் அனுப்பி இருப்பானே?"

"நம்ம சுப்புணிக்கே ஜங்ஷன்ல ரெண்டு ஆட்டோ ஓடறதே, உன்னோட படிச்ச கோதண்டம் தான் ஆட்டோ ஓட்றான். அதுல வந்திருக்கறதுதானே?"

கைலி நாயனார் திடீரென்று இடை மறிப்பார்:

"கொழந்த கொஞ்சம் மெறண்டு தாங்க போயிருச்சு ஜங்ஷனாண்ட. நான் தாங்க பயப்படாதீங்கன்னு சொல்லி நேரா நம்ம வூட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆளுதான் நெடு நெடுவா வளர்ந்திருச்சே தவிரக் கொழந்தைக்கு ரொம்பவும் பூஞ்சை மனசுங்க. மதராஸ்ல அம்மா சௌக்கியம் தானுங்களே? ஏதோ இருநூறுக்கு ஒரு நூறு சேர்த்து முந்நூறாக் கொடுத்தீங்கன்னா உங்க புண்ணியத்துல இந்தக் கழுதக்குக் கொஞ்சம் புல்லைக் கண்ணில காட்டுவேன். விலைவாசி எல்லாம் எக்குத் தப்பா எகிறிக் கெடக்குங்க. கொழந்தைக்கு ரொம்ப நல்ல மனசு. போட்டுத் தருவார்ரா அஜீத்து. சும்மாக் கனைக்காத"

27 comments:

Murali said...

Dear Ram

Your posting took me back to the good old days when we had to travel from bus stand to my nearby home town..

Keep writing.. They are wonderful.

Murali

தெருத்தொண்டன் said...

ரசிக்க வைத்த நடை.. அங்கதம்..
ஊரில் இருந்து திரும்பி எல் ஏ வந்ததும் எப்பட் வீடு செல்வீர்கள் என்பதையும் ஒரு பதிவாக (சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை) போடுங்கள்..மனித கேரக்டர்கள் எவ்வளவு குறுக்கிடுகின்றன என்று பார்க்கலாம்..

தெருத்தொண்டன் said...

எப்படி வீடு செல்வீர்கள் என்று இருந்திருக்க வேண்டும்

G.Ragavan said...

நல்ல நகைச்சுவை நடை. என்ன சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி அதற்குத் தீனியும் போட்டிருப்பதுதான் உங்கள் சாமர்த்தியம். ஒரு வாரயிதழில் வருவதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்ட கதை. பாராட்டுகள் ராம்.

ஜெ. ராம்கி said...

appadiye pillayar koilarunthu left edukkama...straightaa vayakkattula irangi nadantha.... welcome to my home!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

Thanks, Murali. Will continue.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டியர் தெருத்தொண்டர்,

'புகுந்தகப் பெருமை'யும் எழுது என்கிறீர்கள். ஆகட்டும், பார்க்கலாம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நன்றி, ராகவன். தொடர்வோம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ராம்கி,

உங்கள் வீட்டுக்குக் கொஞ்சம் தெற்கே ஒரு ஆலமரத்தடி, களத்து மேடு இருக்கவேண்டுமே? இன்னும் இருக்கிறதல்லவா? அந்த ஆலம் விழுதுகளில் தொங்கியபடி வேகமாக 'லாங்ங்ங் ஜம்ப்' செய்த வெற்றித் தடயம் இன்னமும் என் வலது மணிக்கட்டில்! 'லாண்ட்' ஆகும்போது என் வலது கை மேலேயே லாண்ட் ஆகிக் கை வீங்கிப் போய், வீட்டில் எண்ணெய் தடவி உருவியபடியே செம திட்டு!

பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்திலேயே இருக்கிற வேணுகோபால ஸ்வாமியின் '93 கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்தீர்களா? அப்படியென்றால் என்னையும் அங்கே பார்த்திருப்பிர்களே?!

Anonymous said...

cool ...

இவளோவும் சொல்லிட்டீங்க அதோட நலத்துக்குடிக்கும் மாயவரத்துக்கும் பார்டர்ல இருக்குற ரோட்டோர அம்மன் கோவிலயும் அதுக்கு ஏதுத்தாப்ல இருக்குற எங்க வீட்டயும் பத்தி சொல்லி இருக்கலாம்
its All right

era.murukan said...

//
ஜங்ஷனின் விடியற்கால நறுமணக் கலவை அதி தீவிர தனித் தன்மை கொண்டது. 'ஜில்' தண்ணீர் மேலே பட்டதால் கோபித்துக்கொண்டு பொசுங்கும் எரிநாற்ற நிலக்கரி, நடைவண்டிகளின் இளைத்த சோனித் தேநீர் வாசனை, இன்னமும்
//

'மூக்கும் முழியுமான' நல்ல ரசிகனய்யா நீர். பலே சோழா.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடாடா ரெமோ, நீங்க அந்த அம்மன் கோவில் கிட்டத்தான் இருக்கீங்களா? இது தெரியாமப் போச்சே. அடுத்த விசிட் (இந்த வருஷக் கடோசி) வரும்போது, உங்க வீட்டையும் சேர்த்து ஒரு சுத்து சுத்திடமாட்டேன்?!

அது சரி, அந்நியனுக்கு முந்தினவரா நீங்க, இந்தப் 'பெயர்'ல?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள இரா.மு,

'பலே சோழா'ங்கற உங்க பாராட்டு, கல்கியே நேர்ல வந்து என் தோளைத் தட்டிக் கொடுத்த மாதிரி.

ரெடியா இருங்கண்ணா. டிசம்பர்ல ஒரு சபா, ஒரு கேண்டீன், ஒரு அரங்கேற்றம் விட்டுறக்கூடாது. இப்பயே உங்க நேரத்துக்குத் துண்டு போட்டுட்டேன். வீட்ல சொல்லிடுங்க;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மன்னிகவும், வல்லவன், (இன்னொரு 'ல'வைப் பெயரில் காணோமே?) நான் வரைந்திருந்த ஒரிஜினல் மேப்பில் புதுத்தெரு கையடிப் பம்பிலிருந்து, லயன்கேட் ஆடாதொடை, செட்டிகுளம் காட்டாமணி வரை அட்டகாசமாகத்தான் வந்திருந்தது. மேப்க்வெஸ்ட்டும், யாஹுவும், கூகிளும் அந்த மேப்புக்குப் போட்ட சண்டையில்...சரி, இதே போதும் என்று நான் தான் சிம்பிளாக விட்டு விட்டேன். சாரி;-)

Anonymous said...

ராம் நீஙக வந்தாலும் என்னை பார்க்கமுடியாது ஏன்னா நான் தான் இப்பொ 94583 ல இருக்கேனே.
எதாவது தமிழ் புக் வேணுமினா மெயில் அனுப்புங்க(பதிலுக்கு நானும் புக் கேட்பேன் OAKY நாதான்.
இல்ல இல்ல என் பேரு அன்னியன்லேர்ந்து சுட்டதுதான்

Anonymous said...

Sorry Ca - 98543

துளசி கோபால் said...

ராம்,

குதிரைவண்டிப் பயணம் அருமை. சிரிச்சு சிரிச்சு இப்பப் பாருங்க கண்ணுலே தண்ணி:-)))

Anonymous said...

Remo --> Mugamoodi

Ramya Nageswaran said...

ராம்..ரொம்ப நல்லா எழுதறீங்க.. நீங்க ஏன் நடிக்கப் போனீங்க?? பேசாம 'கிரேஸி மோகனுக்கு' போட்டியா வசனம் எழுதலாமே?

ஜெ. ராம்கி said...

http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram3.jpg

http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram2.jpg

http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram1.jpg

photos taken on today, 28th August 2005 at 5.00 p.m

ஜெ. ராம்கி said...

src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram3.jpg"

src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram2.jpg"

src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/ram1.jpg"

Anonymous said...

Hi Ram,

Naan Arun. Nanum Mayavaram than...apadiye nama oorai kaan munaal kondu vanthu niruthitinga...

Manmadan said...

ரொம்ப சுவாரஷ்யமாக எழுதியிருக்கிறீர்கள்......

தருமி said...

நல்லா இருக்கு; பாடம் கத்துக்கணும்...

Anonymous said...

'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்' By Tholkappian of Mayiladuthurai(presently in Dubai)

ஜீவி said...

எதையோ தேடி எங்கோ வந்தவன், தங்கள் பதிவைப் படிக்க ஆரம்பித்து, அந்த மயிலாடுதுறையின் மகாத்மியம் கண்டு, புன்னகை லேசாக விரிய அது பெருஞ்சிரிப்பால் பல்கிப் பெருகிய மாண்பை என்னன்பேன்!
ஏனிந்த இடைவெளி?.. இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லையா?
தொடருங்கள்.
படித்துச் சிரிக்கக் காத்திருக்கிறோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஜீவி,

உங்களைப் போன்றவர்களின் அன்பான பதில்களினால் தான் என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஊக்கமே பிறக்கிறது.

கண்டிப்பாக மீண்டும் மிக விரைவில் தொடர்கிறேன்.

எல்லே ராம்