குய்லினின் இன்னொரு விசேஷத்தை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அதுதான் ‘வாட்டர்ஃபால் ஹோட்டல்’. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த அதிசயம் ஒரு 646 ரூம்கள் கொண்ட 15 மாடி ஹோட்டல்.
இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா?
148 அடி உயரமும் 236 அடி அகலமும் கொண்ட இந்த ஹோட்டலின் மீதிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி ‘தடதட’வென்று 30 நிமிடங்களுக்கொரு தடவை ஹோட்டலின் பக்கவாட்டில், அறைகளை நனைத்தவாறே கொட்டி ஆச்சரியப்படுத்துகிறது. பக்கத்திலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

சைனாவின் மலைகள், காடுகள், நகரங்கள் என்று எல்லாவற்றிலும் சுற்றியாகி விட்டது. ஆறுகளை மட்டும் சும்மா விடலாமா?
லி ரிவர் க்ரூயிஸ்!
இந்த பிராந்தியம் முழுவதுமே ஒரு மாதிரியான சுண்ணாம்பு மலைகள், காரைக் குன்றுகள். ஆங்கிலத்தில் karst என்று சொல்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த மலைகள்தான், பலவிதமான உருவ அமைப்புகளில்!


ஒன்றொற்றுக்கும் ஒரு பெயர் வைத்து சீனர்கள் மகிழ்கிறார்கள்.
நடுவே லி நதி பிரவாகமாக ஸ்ரீரங்கம் அகண்ட காவிரி மாதிரி ஓடுகிறது.
குய்லினிலிருந்து ‘யாங் ஷூ’ வரை, கிட்டத்தட்ட 52 மைல் படகுப் பயணம். படகென்றால் ஏதோ இரண்டு பேர் உட்கார்ந்துகொண்டு ஆண் துடுப்பு போட்டபடியே ”வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்” என்று பாடிக்கொண்டே ஹீரோயினைக் கவிழ்க்க சதி செய்யும் சின்ன போட் இல்லை. இவை இரண்டு மூன்று தளங்கள் உள்ள பெரும் படகுகள்.

உள்ளே உட்கார்ந்தபடி சாப்பிட, வேடிக்கை பார்க்க எல்லா வசதிகளும் (பாத்ரூம்கள் உட்பட) செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய நதிகளை இணைத்து இம்மாதிரியெல்லாம் பிரமாதமாகச் செய்ய முடியும். வியாபாரம் பெருகும், கலாசாரம் வளரும். மொழிவாரி அடிதடிகள் ஒழியும். பல வெளிநாடுகளில் இதெல்லாம் செய்து முடித்திருக்கிறார்கள்.. ஹும்ம்!
ஒரே நேரத்தில் 200 பேர்களுக்கு மேல் இந்த படகுகளில் பயணம் செய்ய முடிகிறது. நதியில் நல்ல ஆழமும் வேகமான நீரோட்டமும் இருப்பதால் படகுகள் வேகமாகவே பயணிக்கின்றன.
எதிர்த்திசையில் திரும்பவரும் காலி போட்களைப் பார்த்தோம். அதிகமான நீர்வேகத்தால் அவை தள்ளாடிக்கொண்டேதான் வந்து கொண்டிருந்தன. நாங்கள் 3 மணி நேரத்தில் செல்லும் பயணத்துக்கு ரிடர்ன் ட்ரிப் சில சமயங்களில் ஏழு, எட்டு மணி நேரங்கள் கூட ஆகுமாம்.

முன்னெச்சரிக்கையாக life jackets, safety equipment எதுவுமே கண்ணில் தென்படவில்லை.
நதிக்கரை கிராமங்களிலிருந்து சின்னஞ்சிறு மூங்கில் ஓடங்களில் சிறு வியாபாரிகள் நம் படகுகளின் அருகே வந்து ஒட்டி நம் வேகத்தில் ஓட்டியபடியே பழங்கள், காய்கறிகள் விற்கிறார்கள்.

சில பேர் அப்போதுதான் பறித்த ‘லி புஷ்பங்க’ளையும் வியாபாரம் செய்வது கண்டேன். ஒவ்வொரு படகருகிலும் அவர்கள் அம்பு போல் கிட்டச்சென்று ஒட்டி நின்று வியாபாரம் செய்வது பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. நதியின் வேகமான நீரோட்டத்தையும் எதிர்ப்பு விசையையும் அவர்கள் நின்றபடியே சமாளித்துக் கொண்டு படகு படகாகச் செல்வது பார்க்கவேண்டிய
காட்சி.

எங்களுக்கான மதிய சாப்பாடும் படகிலேயே தயார் செய்யப்பட்டு, பலவிதமான நீர்வாழ் ஜந்துக்களால ஆன சம போஜனமாக பரிமாறப்பட்டது. எங்கள் குழுவின் அமெரிக்க நண்பர்கள் இதுவரை கண்டிராத, கேட்டிராத மீன், நண்டு, இன்னமும் பெயர்தெரியாத பல அண்டர்வாட்டர் ஐட்டங்களைச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
குய்லின் - யாங் ஷூ நதிப் பிரயாணம் மிகவும் பிரபலமானதென்பதால் நதியில் ஏகப்பட்ட டீசல் போட்கள் நதி நீரை மாசுபடுத்தியபடியே சென்றது எனக்குக் கவலை அளித்தது. எல்லா படகு ஓட்டுனர்களும், வேலையாட்களும் அதே நீரில்தான் குளியல், சமையல், துணி துவையல் என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதே டீசல் தண்ணீரில் வளர்ந்த மீன்கள் லஞ்சில்
பரிமாறப்பட்டன என்பது நினைத்தாலே குமட்டும் விஷயம். படகுகள் எல்லாமே அரசுக்கு சொந்தமாம். நோ யூனியன், நோ தகராறு, நோ ஸ்ட்ரைக்!
கரையோர கிராமங்களில் நம் ஊர் டைப் எருமை மாடுகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல புஷ்டியான மாடுகள். கறவை மாடுகளா என்பது தெரியவில்லை.

ஒரு விசித்திரமான ஆனால் கொடுமையான ‘அவுட்சோர்சிங்’ செய்முறை கண்டேன். உலகம் முழுவதுமே சீனாவிடம் எல்லா தொழில்களையும் அவுட்சோர்சிங் செய்து கொண்டிருக்க, லி நதி மீனவர்கள் Cormorants என்கிற ஒரு மாதிரியான கழுகு போன்ற பறவைகளிடம் தங்கள் மீன்பிடி வேலைகளை அவுட்சோர்சிங் செய்து விட்டிருந்தார்கள்.

அந்தப் பறவைகள் நல்ல ஆழங்களில்கூட முங்கி எழுந்து வாயில் மீன்களைக் கவ்விக் கொண்டு வருகின்றன. வாயில் கவ்விய மீன்களை அவை பசியில் விழுங்கிவிடாமல் இருக்க அந்தப் பறவைகளின் கழுத்தில் இறுக்கமான இரும்பு வளையங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். படகுக்குத் திரும்ப வந்ததும் அந்த மீனவர்கள் போடும் சிறு சிறு மீன் துண்டுகளை மட்டுமே அவை
இரையாக சாப்பிட முடியும். பெரிய மீன்களை அவுட்சோர்சிங் எஜமானர்கள் வியாபாரம் செய்யவென்று எடுத்து தனியாக வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பறவைகள் பறந்து ஓடிப்போய்விடாமல் இருக்க அவற்றில் கால்களில் கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை ;-(

நதியை ஒட்டிய பல கிராமங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தமாதிரியேதான் இன்னமும் வாழ்கிறார்களாம். டூரிஸ்ட் பிசினஸ் பாதிக்கும் என்று நினைக்கும் இடங்களை அரசாங்கமே தத்தெடுத்துக்கொண்டு பழங்குடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறது. வெளிநாட்டு டூரிஸ்ட்களுக்காக பிரதானமாகக் கட்டப்பட்டிருக்கும் சில பல கரையோர ரிசார்ட் இடங்கள் அப்படி அரசாங்கம் கையகப்படுத்தியவைதான் என்று கைடு சொன்னான். நதிக்கு நடுவிலே ஒரு கல்லை வைத்து ’ப்ராணப் பிரதிஷ்டை’ பண்ணி, கோவிலை அப்புறப்படுத்த முடியாது, வேண்டுமானால் சுற்றி சுற்றிப் போங்கள், இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுங்கள் என்கிற போங்கு டெக்னிக்கெல்லாம் அங்கே விலை போகாது போலும்!
யாங் ஷூ என்பது ஒரு சின்னஞ்சிறு ஊர். பாசி மணி, ஊசி மணியெல்லாம் விற்கிறார்கள். ஊருக்கு நடுவே பத்தாம் நூற்றாண்டு நதி ஒன்று மாயவரத்து சின்ன சாக்கடை மாதிரி ஓடுகிறது. அதிலும் ஒரு சிறு படகு சவாரி.
“இதுதான் சைனாவின் வெனிஸ்” என்றார்கள். நான் ஒரிஜினல் வெனிஸ் போயிருக்கிறபடியால் “சரி” என்று கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டேன்.
(தொடரும்)